யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்துள்ளதை ஊடகத்தில் வெளியான வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதை 'விசில் சின்னத்திற்கு வாக்களித்த சீமான்' என்று தவெகவினர் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்த தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததாகக் கூறி தவெகவைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. இதே போன்று தவெகவினர் பலரும் சீமான் வாக்கு செலுத்துவது போன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
சீமானே விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டார் 😂
ஆதாரத்துடன் பெலிக்ஸ் 😂 pic.twitter.com/hWijLkDUph
உண்மை என்ன?
பொதுவாக வாக்குப்பதிவின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை தேர்தல் விதிமுறைகளில் ஒன்றாகும். அப்படியிருக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு செலுத்தியபோது, வாக்குச்சாவடிக்குள்ளேயே வீடியோ எடுக்கப்பட்டது எப்படி? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமீறல் தொடர்பாக அந்த வீடியோவை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பரவி வரும் வீடியோ குறித்து தேடியதில், சீமான் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததாக கூறும் செய்திகளுக்கு எந்தவொரு ஆதாரங்களும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும், Indiaglitz ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 23 அன்று “மனைவியுடன் வந்து ஓட்டு போட்ட சீமான் | Seeman Vote Polling | Election Day” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், சீமான் தனது வாக்கை விசில் சின்னத்திற்கு செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதே போன்று, மின்னம்பலம் ஊடகப் பக்கத்திலும், it_pasarai_aranthangi போன்ற பலரது Instagram பக்கத்திலும் 'ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் அண்ணன்' என்று குறிப்பிட்டு சீமான் வாக்கு செலுத்தும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதிலும் தெளிவாக சீமான் விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்தவில்லை என்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இவற்றில் இருந்து சீமான் விசில் சின்னத்திற்கு வாக்கு அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
முடிவு:
நம் தேடலின் வழியாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்தினார் எனப் பரவும் தகவல் முற்றிலும் தவறானவை.
