யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் ஆடும் மாடும் நம் செல்வங்கள் தான்” என்று திருவள்ளுவர் இந்த குறளில் கூறியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு!

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜூலை 10ஆம் தேதி நாதக சார்பில் மதுரை ஆடு - மாடுகளின் மாநாடு என்று கூறுகிறார். மேலும் "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்ற திருக்குறளை கூறிய சீமான், கல்வி தான் மானுடர்க்குச் செல்வம், ஆனால் மாடும் நம் செல்வங்கள் என்பதை திருவள்ளுவர் வலியுறுத்தி பாடுகிறார் என்று கூறியிருந்தது.
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு!
'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு… pic.twitter.com/wcGOvZIEo8
உண்மை என்ன?
சீமான் கூறிய இத்திருக்குறளுக்கு விளக்கம் என்ன என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது Valaitamil. Com என்ற இணைதளப்பக்கத்தில் தேடிய போது, சீமான் கூறிய திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது. அதில் மு.வரதராசனார், பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர்களின் உரைகள் அதில் இடம்பெற்றிருந்தது.

அதில் மு.வரதராசனாரின் உரையில் "ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் மாடு என்பதன் பொருள் செல்வம். அதாவது கல்வியைத் தவிரப் பொன், பொருள் போன்ற செல்வங்கள் எல்லாம் சிறந்தவையே அல்ல என்பதே இதன் பொருளாகும்.

ஆனால் “கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் ஆடும் மாடும் நம் செல்வங்கள் தான்” என்று திருவள்ளுவர் இந்த குறளில் கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறான பொருளை தொடர்ந்து பேசி வருகிறார்.
முடிவு :
”மாடல்ல மற்றை யவை” என்பதன் பொருள் தெரியாமல், வள்ளுவரின் திருக்குறளைச் சீமான் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.