யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பேருந்து நிலைய மாதிரி படத்திலேயே தற்போது உள்ள வடிவம் தான் உள்ளது. சென்னையில் 1968-ம் ஆண்டே வ.உ.சி.க்கு சிலை வைத்தாகிவிட்டது.
பரவிய செய்தி
சென்னையில் வ.உ.சி-க்கு சிலை இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திமுக-வின் சின்னமான உதய சூரியன் வடிவில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றப்பட்டுள்ளது. - சீமான் (நாதக)

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திட்டத்தைத் தொடங்கியது அதிமுக. அதனை முடித்த பிறகு பெயர் வைப்பது திமுகவாக உள்ளது. அந்த பேருந்து நிலையம் உதய சூரியன் வடிவத்தில் கட்டி முடித்து வைக்கப்பட்டுள்ளது. எங்கள் காசில் உங்கள் கட்சி சின்னம் எப்படி வருகிறது?” எனக் கூறியுள்ளார்.
மேலும், “வ.உ.சி-க்கு தலைநகரில் (சென்னை) சிலை உள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மை என்ன?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போதே அதன் கட்டட அமைப்பு திமுகவின் சின்னமான உதய சூரியன் வடிவில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த பேருந்து நிலையம் தொடர்பாக விரிவான வீடியோ ஒன்றையும் யூடர்ன் வெளியிட்டுள்ளது.
சீமான் சொல்வது போல் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திட்டம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது தான். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதன் கட்டுமான வடிவமைப்பு தற்போது இருப்பது போல் (உதய சூரியன்) மாற்றப்பட்டது என்பது முற்றிலும் தவறானது.
தற்போது பேருந்து நிலையம் உள்ள இடத்தை google earth உதவியுடன் கடந்த காலத்திலிருந்த செயற்கைக் கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தோம். கட்டுமானத்திற்கு அடித்தளம் போடப்பட்ட 2019, 2020 மற்றும் 2021 காலத்திலேயே பேருந்து நிலையத்தின் வடிவம் தற்போதுள்ள அதே வடிவத்தில் தான் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் அதிமுக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தை விளக்கி ’Make The Changes’ என்ற யூடியூப் பக்கத்தில் 2019, ஜனவரி மாதம் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் தற்போது பேருந்து நிலையம் உள்ள வடிவத்திலேயே திட்ட மாதிரி இருப்பதைக் காண முடிகிறது.

இவற்றிலிருந்து திமுக வந்த பிறகு பேருந்து நிலைய வடிவம் மாற்றப்பட்டதாகச் சீமான் சொல்வது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாகத் தமிழ்நாட்டின் தலைநகரில் (சென்னை) வ.உ.சிதம்பரனாருக்கு சிலை இல்லை எனச் சீமான் பேசியுள்ளார். சென்னை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சுங்க வரி அலுவலகத்திற்கு எதிரில் வ.உ.சி. சிலை உள்ளது. இதனை திமுக-வின் முதல் ஆட்சிக் காலமான 1968-ம் ஆண்டு அப்போதைய உணவு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.மதியழகன் தலைமையில் பி.டி.ராஜன் திறந்து வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு (2023) தமிழ்நாடு அரசால் கோவை வ.உ.சி., பூங்கா வளாகத்தில், முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது 150வது பிறந்த நாளையொட்டி 2022ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு மலரை வெளியிட்டுள்ளார்.
இதனைத் தவிர்த்து வ.உ.சி. எழுதிய நூல்கள்-11, பதிப்புகள்-7, உரை-3, மொழியாக்கம்-4, வ.உ.சி. பற்றிய வரலாற்று நூல்கள்-20, ஆய்வு நூல்கள்-5 முதலானவை தமிழ்நாடு அரசால் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர்களால் கோவை மத்தியச் சிறையில் வ.உ.சி. அடைக்கப்பட்டு எண்ணெய் ஆட்டும் செக்கை இழுக்குமாறு தண்டிக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு கோவை மத்தியச் சிறை வளாகத்தில் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சி. பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீமான் பேசுகையில் வ.உ.சி.-க்கு தமிழ்நாடு அரசும் திமுகவும் எந்த அங்கிகாரமும் வழங்காததுபோல் பேசியுள்ளார்.
சீமான் இதற்கு முன்னர் பேசிய பொய் செய்திகளின் தொகுப்பு யூடர்ன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சீமான் பேசிய பொய்ச் செய்திகள் மற்றும் அறிவியலுக்கு புறம்பான தகவல்களின் தொகுப்பு!
முடிவு:
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டமைப்பை திமுக உதய சூரியன் வடிவில் மாற்றியதாகவும் வ.உ.சி-க்கு சென்னையில் சிலை இல்லை எனவும் சீமான் சொன்னவை தவறான தகவல்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பேருந்து நிலைய மாதிரி படத்திலேயே தற்போது உள்ள வடிவம் தான் உள்ளது. திமுக முதல் முதலில் ஆட்சி பொறுப்பேற்ற போதே வ.உ.சி.-க்கு சென்னையில் சிலை (1968) வைக்கப்பட்டுள்ளது.