யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இராணுவத்தில் பணியாற்றும் போது இறந்த தமிழ்நாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
”கள்ளச் சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் கொடுப்பார்கள். ஆனால் இந்த நாட்டு பாதுகாப்புக்காக இராணுவத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை” - சீமான்
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் இறந்ததையும் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டு, ‘கள்ளச் சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் கொடுப்பார்கள். ஆனால் இந்த நாட்டு பாதுகாப்புக்காக இராணுவத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை’ என்று கூறினார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றும் போது இறந்தால், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண நிதி குறித்து இணையத்தில் தேடினோம்.
’சமயம்’ செய்தித்தளத்தில் 2021 நவம்பர் மாதம் வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களுக்கான நிவாரண நிதியை அவர்களது வாரிசுதாரர்களுக்கு 30.11.2021 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

’இராணுவத்தில் பணியிலிருக்கும் போது இறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்களான செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த கே. ஏகாம்பரம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த கே. கருப்பசாமி, உத்தமபாளையத்தைச் சேர்ந்த பி.பழனிகுமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்’ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் 2022 ஆகஸ்ட் வெளியான செய்தியில், ’காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த மதுரை மாவட்டம் து.புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இதிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து இராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருவதை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
இராணுவத்தில் பணியாற்றும் போது இறந்த தமிழ்நாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது என்பதை மறைத்து, தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களுக்கு நிவாரண நிதி ஏதும் வழங்கப்படுவதில்லை என்று சீமான் பொய்யான தகவலை பரப்புகிறார்.