யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலே தவெக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
பரவிய செய்தி
”நான் தேர்தல் பரப்புரையில் 5 நிமிடங்கள் அதிகமாக பேசிவிட்டேன் என்பதற்காக என் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போனாலும் ஒரு வழக்கும் (FIR) பதியப்படவில்லை” - சீமான்.
விரிவான விளக்கம்
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதையோட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 28ஆம் தேதி ஆவடி தொகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட 5 நிமிடங்கள் அதிகமாக பேசிவிட்டேன் என்பதற்காக என் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போனாலும் கூட அங்கு ஒரு வழக்கும் (FIR) பதியப்படவில்லை” என்ற கூறினார்.
உண்மை என்ன?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக FIR-கள் பதியப்பட்டது குறித்த செய்திகளை தேடினோம். ‘The Hindu’ செய்தித்தளத்தில் 2025 அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது.
அதில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, கரூர் டவுன் போலீஸார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் கூட்டத்திற்கு வருவது வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டதாகவும், மக்கள் பல மணிநேரமாக தண்ணீர் மருத்துவ வசதி எதுவுமில்லாமல் வெயிலும் கூட்டத்திலும் நின்றதால் களைப்பு ஏற்பட்டதாகவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் C.T.நிர்மல் குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கரூர் சம்பவம் நடந்த சில நாட்களிலே தவெக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிகிறது.
முடிவு:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெகவினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று சீமான் பொய்யான தகவலை பேசிவருகிறார்.