YouTurn

மரங்கள் மாநாட்டில் சீமான் பேசியது அறிவியல்பூர்வமானதா? அவியலா?

மரங்கள் மாநாட்டில் சீமான் பேசியது அறிவியல்பூர்வமானதா? அவியலா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீமான் மரங்கள் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் அறிவியல்ப்பூர்வமாக சரியானவை அல்ல.

பரவிய செய்தி

 “சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பூமியிலுள்ள வளி மண்டலத்தில் பட்டு சிதறுவதால் தான் வானமும் கடலும் நீல நிறமாக இருக்கின்றன. மேலும் இந்த ஓசோன் படலம் என்பது பூமியின்  காடுகளில் உள்ள மரங்களாலும் மற்றும் கடலில் உள்ள நீலப் பச்சை பாசிகளாலும் தான் உருவாகிறது’ - சீமான்.


Video Link:

விரிவான விளக்கம்

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சி சார்பில் திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் ‘மரங்களின் மாநாடு’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பேசி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பூமியிலுள்ள வளி மண்டலத்தில் பட்டு சிதறுவதால் தான் வானமும் கடலும் நீல நிறமாக இருக்கின்றன. அறிவியல் படி ஓசோன் படலம் என்று சொல்லப்படுவதை தான் நாம் வளி மண்டலம் அல்லது காற்றுப் படலம் என்று சொல்கிறோம். மேலும் இந்த ஓசோன் படலம் என்பது பூமியில் உள்ள காடுகள் மற்றும் கடலில் உள்ள நீலப் பச்சை பாசிகளால் தான் உருவாகிறது’ என்று பேசினார்.



உண்மை என்ன?

 

வானம் மற்றும் கடல் நீல நிறத்தில் இருப்பதற்கான அறிவியல்பூர்வமான காரணம் என்னவென்று இணையத்தில் தேடினோம். ‘Scientific American’ தளத்தில் வெளியாகி இருந்த சிறிய கட்டுரையில் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.


 

அதில், கடல் நீல நிறத்தில் இருப்பதற்கான காரணம், கடலில் உள்ள நீர் சூரியனிலிருந்து வரும் ஒளியில் அதிக அலைநீளம் (Wavelength) உள்ள மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களை உறிஞ்சி (Absorption) கொள்வதாக குறிப்பிடப்படுள்ளது. ஆனால் சிறிய அலைநீளம் கொண்ட நீல நிற ஒளி அவ்வளவாக உறிஞ்சப்படுவதில்லை. இதனால், நீல நிற ஒளி மட்டும் மிஞ்சி வெளிவருகிறது. அதனால் தான் கடல் நீல நிறத்தில் இருக்கிறது.

 

ஆனால் வானம் நீல நிறத்தில் இருப்பதற்கு இதே Absorption என்ற நிறங்கள் உறிஞ்சப்படும்

காரணத்தை  சொல்ல முடியாது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் (Molecules) சூரியனிலிருந்து வரும் ஒளியை உறிஞ்சுவதில்லை. வளி மண்டலத்தில் உள்ள இந்த காற்று மூலக்கூறுகள் சூரிய ஒளியை சிதறடிக்கிறது. இந்த ஒளிச் சிதறல் (Light Scattering) கோட்பாட்டின் படி, சிறிய அலைநீளம் உள்ள ஒளி அதிகம் சிதறடிக்கப்படுகிறது. நீல நிறம் மஞ்சள், சிவப்பு நிறங்களை விட ஒப்பீட்டு அளவில் சிறிய அலைநீளத்தை கொண்டுள்ளதால் அது அதிகம் சிதறடிக்கப்படுகிறது. அதனால் தான் வானம் நீல நிறத்தில் உள்ளது.

 

அதேபோல், காலை மாலை நேரங்களில் வானம் சூரியன் உள்ள திசையில் மட்டும் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு காரணம், சூரியன் நமது உச்சிக்கு மேல் இருக்கும் நேரத்தைவிட, அது  வானத்தில் தோன்றும் போதும் மறையும் போதும் அதன் ஒளி வளி மண்டலத்தில் அதிகமாக பயணித்து வர வேண்டியுள்ளது. இதனால், இதனால் சிதறடிக்கப்படமால் மிஞ்சியிருப்பது அதிக அலைநீளம் உள்ள ஒளி மட்டும் தான். அதனால் தான் காலை மாலை நேரத்தில் வானம் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. இந்த சிவப்பு ஒளி சிதறடிக்கப்படுவதில்லை. அதனால் தான் அதன் நிறம் வானத்தில் குறுகிய அளவு மட்டுமே பரவுகிறது.

 

அதேபோல், ஓசோன் படலம் பற்றி தேடிய போது, ‘EPA’ வலைதளத்தில் இது பற்றி எழுதப்பட்டிருப்பதை காணமுடிந்தது. அதன்படி, ‘பூமியின் Stratosphere என்ற அடுக்கு மண்டலத்தில் உள்ள ஓசோன் இயற்கையாகவே உருவானது’ என்பது தெரிகிறது. அதேபோல் பூமியில் நாம் சுவாசிக்கும் ஓசோன் காற்று மாசுபாட்டால் ஏற்படுவதாகும். இந்த வகையில் பூமிக்கு 6 முதல் 30 மைல்கள் வரை மேல் இருக்கும் Stratosphere என்ற அடுக்கு மண்டலத்தில் உள்ள ஓசோன், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களுக்கும் (UV Radiation) ஆக்சிஜன் மூலக்கூறுக்கும் இடையில் நடக்கும் வேதியியல் ஊடாட்டத்தால் உருவானதாகும். இதுதான் பூமியை புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறது.


 

இதிலிருந்து சீமான் மரங்கள் மாநாட்டில் பேசியது அறிவியல்ப்பூர்வமாக சரியானவை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் சீமான் சொல்வது போல், ஓசோன் படலமும் வளி மண்டலமும் ஒன்றல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முடிவு:

 

சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பூமியிலுள்ள வளி மண்டலத்தில் பட்டு சிதறுவதால் தான் வானமும் கடலும் நீல நிறமாக இருக்கிறது என்றும் ஓசோன் படலம் என்பது பூமியில் உள்ள காடுகள் மற்றும் கடலில் உள்ள நீலப் பச்சை பாசிகளால் தான் உருவாகிறது என்றும் அறிவியல்பூர்வமாக உண்மையல்லாத, தவறான கருத்துக்களை சீமான் மரங்களின் மாநாட்டில் பேசியுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.