யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், காவலாளி அமல்ராஜை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்து கூட்டி செல்லும் போது “நீ நாடார் தானே, நீ நாடார் தானே நீ" என்று கேட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
அவரை இழுத்து செல்லும்போது “நீ நாடார் தானே நீ” என்று காவல்துறை அதிகாரி ஏன் கேட்கவேண்டும்? சாதிவெறியில் செயல்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யவேண்டும்.

விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அடுத்த சில நாட்களிலேயே, அந்த புகாரைத் திரும்பப் பெற்றார். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி, திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்தார்.
இந்நிலையில் சீமான், பிப்ரவரி.28 அன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் சீமான் வீட்டிற்கு சென்ற போது, காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியை காவல்துறை அதிகாரிகள் கேட்டதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து காவலாளி அமல்ராஜை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து கூட்டி செல்லும் போது, காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் அமல்ராஜிடம் “நீ நாடார் தானே, நீ நாடார் தானே", என்று கேட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மூத்திரச்சட்டி சொரியன் வகையறா ஆட்சியில், "நாடார் தானே நீ?" என்று ஏன் ஏவல்த்துறை கேள்விக் கேட்க வேண்டும்??? pic.twitter.com/fF2NFbiTN9
"நாடார் தானே நீ" - பிரவீன் ராஜேஷ் (காவல்துறை)
எப்பேர்பட்ட சதி ஒழிப்பு, சமூக நீதி அரசு...! pic.twitter.com/Jtnp1RlLsI
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்து “Polimer News” பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியிட்ட வீடியோ ஒன்றை காண முடிந்தது.
அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு, சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக, விசாரணை செய்ய காவல்துறை அதிகாரிகள் அவர் வீட்டில் நுழைவதையும், அப்போது அங்கிருந்த காவலாளி அமல்ராஜ், காவல்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி செய்வதையும் காண முடிகிறது.
எனவே காவலாளி அமல்ராஜை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்து, அவர்களது வாகனத்தில் ஏற்ற கூட்டி செல்லும் போது “விளாடாத விளாடாத நீ (விளையாடாத விளையாடாத நீ)" என்று கூறுவதை இந்த வீடியோவின் 3:41 வது நிமிடங்களில் தெளிவாகக் கேட்க முடிகிறது.
இந்நிலையில, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும், காவல்துறை அதிகாரிகள் காவலாளி அமல்ராஜிடம் “விளாடாத விளாடாத நீ (விளையாடாத விளையாடாத நீ) என்று கூறியதை, “நீ நாடார் தானே, நீ நாடார் தானே நீ” என்று கூறியதாகக் கூறி தவறான செய்தியை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்து கூட்டி செல்லும் போது “நீ நாடார் தானே, நீ நாடார் தானே நீ என்று கேட்டதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.