யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இரண்டாவதாக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டது ஆவின் பால் விலை குறைப்பு பற்றிய கோப்பில் தான். 2021 மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.
பரவிய செய்தி
ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படவில்லை - சாட்டை துரைமுருகன்
திருக்குறளை தேசிய நூல் ஆக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவில்லை - சாட்டை துரைமுருகன்
விரிவான விளக்கம்
புதிய தலைமுறை டிஜிட்டல் ஊடகத்தில் PT Open Talk என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதிகள் குறித்து பேசியிருந்தார். அதில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படவில்லை என்றும், திருக்குறளை தேசிய நூல் ஆக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
முதலில் ஆவின் பால் விலை குறைத்தது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது மாலை மலர் ஊடகத்தில், ”ஆவின் பால் விலை குறைப்பு - இன்று முதல் அமலுக்கு வருகிறது” என்ற தலைப்பில் 16 மே, 2021 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது. 2021 மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

திருக்குறளை தேசிய நூல் ஆக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று சாட்டை துரைமுருகன் கூறியது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது The Hindu Tamil ஊடகத்தில் ”தமிழை ஆட்சி மொழியாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்” என்ற தலைப்பில் நவம்பர் 15, 2021 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ் மொழியை தேசத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்றும், திருக்குறளை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இரண்டாவதாக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டது ஆவின் பால் விலை குறைப்பு பற்றிய கோப்பில் தான். அதே போல் 2021ஆம் ஆண்டே திருக்குறளை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. இதை மறைத்து பொய்யான தகவலை சாட்டை துரைமுருகன் பரப்புகிறார்.