YouTurn

திருப்பரங்குன்றம் வழக்கு: பொய்களை பரப்பும் ரிப்பளிக் டிவி!

திருப்பரங்குன்றம் வழக்கு: பொய்களை பரப்பும் ரிப்பளிக் டிவி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று கூறி அரசு தரப்பு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவதாகவும் பொய்யான தகவலை ரிப்பளிக் டிவி பரப்பிவருகிறது.

பரவிய செய்தி

“திருப்பரங்குன்றத்தில்  தீபம் ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தெரிவித்த தர்கா செயலாளர்!"

"திருப்பரங்குன்றத்தில்  தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று ஏன் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது? மாநில அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறதா?” - ரிபப்ளிக் டிவி.



Link 

விரிவான விளக்கம்

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோவிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. 

 

இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் மலையில் ஏற அவர்களை அனுமதிக்கவில்லை. இந்த வழக்கு தற்போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணையில் இருக்கிறது. 


இந்நிலையில் ரிப்பளிக் டிவி சிக்கந்தர் தர்காவின் செயலாளர் ஆரிப் கான் என்பவரிடம் பேட்டி எடுத்து ஒளிப்பரப்பியது. அதில் ஆரிப் கான் பேசி முடித்ததும் பேசிய ரிப்பளிக் டிவியின் நெறியாளர் “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று ஏன் திமுக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது? மாநில அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறதா?” என்று கூறியிருந்தார். மேலும், இந்த பேட்டி ஒளிபரப்பப்படும் நேரத்தில் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் Scroll Section-ல் “தீபம் ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தெரிவித்த தர்கா செயலாளர்! நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்படுகிறது என்பதை உறுதிபடுத்திய தர்கா செயலாளர்” என்று எழுதப்பட்டிருந்தது. 



உண்மை என்ன? 


இந்த பேட்டியில் பேசிய சிக்கந்தர் தர்காவின் செயலாளர் ஆரிப் கான், “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாக வழிபாடுகளை ஒற்றுமையாக செய்து வருகின்றனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் தர்கா அருகிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று மதக்கலவரத்தை உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போலீஸ் அதற்கு இடமளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


ஆனால், இந்த பேட்டி ஒளிபரப்பப்படும் நேரத்தில் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் Scroll Section-ல் “தீபம் ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தெரிவித்த தர்கா செயலாளர்! நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்படுகிறது என்பதை உறுதிபடுத்திய தர்கா செயலாளர்” என்று எழுதப்பட்டிருந்தது. இது முற்றிலும் திரிக்கப்பட்ட பொய்யான தகவலாகும். 


செய்தியாளர், “இந்த வழக்குல நீதிமன்ற கொடுத்த தீர்ப்ப விட்டுருங்க அத சுத்தி இருக்குற அரசியல் எல்லாதையும் விட்டுருலாம், ஒருவேளை அந்த தூண் கோவிலோட இடத்தில் இருந்தா தர்காவுல அதுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?” என்று கேட்கிறார். 


அதற்கு பதில் கூறிய தர்கா செயலாளர், ”முதலில் நில சம்பந்தமான கேஸ் என்றால் சிவில் நீதிமன்றம் தான் அதுபற்றி தீர்மானிக்க முடியும். இராண்டாவது ஆண்டாண்டு காலமாக உச்சி பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றுவதாக சொல்கிறார்கள். ஒருவர் வந்து அதை கட்டாயப்படுத்தி மாற்ற முடியாது” என்று தான் கூறுகிறார். மேலும், ‘இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் தர்கா அருகிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று மதக்கலவரத்தை உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன’ என்பதையும் தர்கா செயலாளர் தெளிவாகவே முன்வைக்கிறார். 


அந்த பேட்டியின் போது செய்தியாளரும் கூட, “பல ஆண்டுகளாக உச்சிபிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது.” என்றுதான் தெரிவிக்கிறார். இவ்வாறு இருக்கையில், மலை உச்சியில் (தீபத்தூண் என்று இந்து முன்னணியால் சொல்லப்படும் இடத்தில்) தீபம்  ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தர்கா செயலாளர் தெரிவித்ததாக ரிப்பளிக் டிவி பொய்யான தகவலை பரப்புகிறது. 


மேலும், இந்த பேட்டியை எடுத்த செய்தியாளர் டிவி நெறியாளரிடம் பேசும்போது, “திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்படுவதாக தர்கா நிர்வாகி தெரிவிக்கிறார். கோயில் நிர்வாகம் தீபம் தொடர்பாக தர்கா தரப்பிற்கு எந்தத் தகவலும் தரவில்லை என்று தர்கா நிர்வாகி கூறியதாக” பொய்யான தகவலை கூறுகிறார்.


ரிப்பளிக் டிவியின் இந்த பேட்டியில் பேசிய  சிக்கந்தர் தர்காவின் செயலாளர் ஆரிப் கான் எவ்விடத்திலும் ’கோயில் நிர்வாகம் தீபம் தொடர்பாக தர்கா தரப்பிற்கு எந்தத் தகவலும் தரவில்லை’ என்று குறிப்பிடவே இல்லை. தர்காவின் செயலாளர் குறிப்பிடாத ஒன்றை அவர் சொன்னதாக தவறான தகவலை ரிப்பளிக் டிவியின் செய்தியாளர் கூறுகிறார்.


பின்னர் ரிப்பளிக் டிவியின் நெறியாளர்,  “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று ஏன் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது? மாநில அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறதா?” என்று கேள்வி கேட்டவுடன், செய்தியாளர் ”நீதிமன்றத்தில் தவறான வாதம் முன் வைக்கப்பட்டது. அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர்  தீபம் ஏற்றுவதன் பாரம்பரிய குறித்தே சந்தேகம் கிளப்பினார்” என்று தெரிவித்தார். 


திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இந்த வழக்கில், "திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளாக ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் கோவிலைக் கட்டாயப்படுத்த முடியாது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்துக்கே முழு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்துக்கு என்று சட்டவிதிகள் உள்ளன. தனிநபர் உரிமையை நிறைவேற்ற முடியாது” என்று அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது. மேலும், ’இந்துத்துவ அமைப்புகளால் தீபத் தூண் என்று சொல்லப்படுவது சமணர்களால் ஏழுப்பட்டது. இந்து மதம் சார்ந்த தூண் அல்ல’ என்று அரசு தரப்பு வாதம் செய்தது. 


இதில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வழக்கமே இல்லை என்று எங்கும் அரசு தரப்பு வாதம் செய்யவில்லை. 


உண்மை இவ்வாறு இருக்கையில், ரிப்பளிக் டிவியின் நெறியாளரும் செய்தியாளரும் திருப்பரங்குன்றம் வழக்கில் தவறான தகவலை கொடுத்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக பொய்யான செய்தியை தொலைக்காட்சியில் பரப்புகிறார்கள்.


முடிவு:


திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம்  ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தர்கா நிர்வாகம் தெரிவித்தாகவும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் இல்லை என்று கூறி அரசு தரப்பு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துவதாகவும் திரிக்கப்பட்ட பொய்யான தகவலை ரிப்பளிக் டிவி பரப்பிவருகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க