யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவை காங்கிரஸ் வெளியிடவில்லை. இது கடந்த மக்களவை பொதுத் தேர்தலின் போதே பரப்பப்பட்ட பொய் செய்தி. மேலும் பொய் செய்தி பரப்பியவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
வயநாடு லோக்சபா தொகுதிக்காக காங்கிரஸுக்கு வாக்களிக்கும் வகையில் காங்கிரஸ் என்ன மாதிரியான விளம்பரம் செய்துள்ளது என்று பாருங்கள்.

விரிவான விளக்கம்
நாட்டின் 18வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. அந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பிறகு வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். நேற்றைய தினம் (நவ.13) வாக்குப்பதிவும் நிறைவடைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாக வாட்சப்பில் வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. அதில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடித்து விட்டு மீண்டும் பாபர் மசூதி கட்டப்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
தற்போது பரவக் கூடிய இதே வீடியோ 2024 மக்களவை பொதுத் தேர்தலில் போதும் வலதுசாரிகளால் பரப்பப்பட்டுள்ளது. அப்போதே இது பற்றி காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான 2024, ஏப்ரல் மாதம் ‘ANI’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கேரளா செய்தி தொடர்பாளர் லாவண்யா பலால் இந்த வீடியோ தொடர்பாக அளித்த புகார் கடிதத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக மத ரீதியில் பொய்யான வீடியோ பரப்பியது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ குழல்நாடன் புகார் அளித்த செய்தி 2024, மே மாதம் ‘New Indian Express’ தளத்தில் வெளியாகியுள்ளது. அப்புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீஸ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவற்றிலிருந்து காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி பற்றி மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் போலியான வீடியோ வலதுசாரிகள் கடந்த மக்களவை பொதுத் தேர்தலின் போதே பரப்பியதை அறிய முடிகிறது. அப்போதே புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
வயநாடு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அயோத்தி ராமர் கோவில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்படுமெனக் காங்கிரஸ் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது.
இந்த வீடியோவை காங்கிரஸ் வெளியிடவில்லை. இது கடந்த மக்களவை பொதுத் தேர்தலின் போதே பரப்பப்பட்ட பொய் செய்தி. மேலும் பொய் செய்தி பரப்பியவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.