யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ எனப் பரவும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள வாகனத்தின் பதிவு எண் மூலம் உறுதி செய்ய முடிகிறது. மேலும் அங்கிருப்பவர்களும் பஞ்சாபிகள் அணியும் தலைப்பாகைகளுடன் இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சிப்காட்டிற்காக காவல்துறை பாதுகாப்புடன் விளை நிலங்கள் புல்டோசர் வைத்து அழிக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படியான எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை.
இதையடுத்து பரவி வரும் வீடியோவை கூர்ந்து கவனித்தால், சரியாக 0:15 நிமிடத்தில் ஒரு கார் இருப்பதை பார்க்கமுடிந்தது. அந்த காரில், PB 11 AH 0222 என்ற பதிவு எண் இருந்ததை தெளிவாக பார்க்கமுடிந்தது. இது பஞ்சாப் மாநிலத்தின் பதிவு எண்ணாகும்.

அதே போல் அந்த காருக்கு முன்பு சில நபர்கள் நிற்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அவர்கள் பஞ்சாபிகள் அணியும் தலைப்பாகைகளுடன் இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. இதிலிருந்து இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிச் செய்ய முடிந்தது.

முடிவு:
எனவே, ‘விளை நிலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் புல்டோசர்’ எனப் பரவும் வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சிப்காட்டிற்காக காவல்துறை பாதுகாப்புடன் விளை நிலங்கள் புல்டோசர் வைத்து அழிக்கப்படுவதாக தவறாகப் பரப்புகின்றனர்.
