யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘Special Component Plan’ என்பதை பட்டியலினத்தவருக்கான தனிப்பட்ட திட்டங்களுக்கான நிதி என்று பொருள் கொள்வது தவறானது. பொதுத் திட்டங்களில் SCSP நிதி என்பது அத்திட்டத்துக்கான பொது நிதியில் பட்டியலின மக்களுக்கு சென்ற சேரவேண்டிய பங்கு ஆகும்.
பரவிய செய்தி
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: பட்டியலின மக்கள் மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் போட்டுடைத்த தலைவர் டாக்டர் அய்யா அவர்கள்.!
#election2026 #DrKrishnaSamy #DMKFailsTN
விரிவான விளக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்நிலையில், Special Component Plan (SCP) என்ற திட்டத்தின் கீழ் பட்டியலின மக்களின் மேம்பாட்டுகாக வழங்கப்பட்ட நிதி மடைமாற்றப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப் பயன்பட்டதாக ‘புதிய தமிழகம் கட்சி’யின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசு SCSP திட்டத்திற்காக மாநில அரசுக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகைக்கு செலவிடப்படுவதாக கிருஷ்ணசாமி சொல்கிறார்.
உண்மை என்ன?
முதலில், ’Special Component Plan’ என்பது ஆதி திராவிடர்களுக்கான தனித்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி தான் என்று உண்மைக்கு மாறாக பேசுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் பொதுத் திட்டங்களைப் பொறுத்தவரை SCP நிதி என்பது அத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் பொது நிதியில் பட்டியலின மக்களுக்கு உரிய பங்கை உறுதி செய்யும் வழிமுறை ஆகும்.
ஒன்றிய அரசு கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி, Scheduled Castes Sub-Plan (SCSP) என்பது ”ஒரு மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்படும் எல்லா வகையான பொதுத்திட்டங்களின் பயன்கள் பட்டியலின மக்களின் மக்கள்த்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு சென்று சேரும் வகையில் நிதி ஒதுக்கப்படவேண்டும்” என்பதாகும்.

உதாரணமாக ஒரு மாநிலத்தில் 20 சதவீதம் பட்டியலின மக்கள் இருந்தால், ஒரு பொது திட்டத்திற்கு ஒதுக்கப்படும் ஒரு கோடி ரூபாயில் 20 லட்சம் பட்டியல் சமூக மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்யப்படவேண்டும் என்பதாகும்.
மகளிர் உரிமைத் தொகைக்கான, தமிழ்நாடு அரசு செலவு செய்வது குறித்து தேடினோம். தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இது குறித்த விவரங்கள் இருப்பதைக் காணமுடிந்தது.
அதில் சமூக பாதுகாப்பும் நலனும் என்ற தலைப்பின் கீழ் வெவ்வேறு பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்கள் இருக்கிறது. 103 என்ற எண்ணின் கீழ் மகளிர் நலக்காக ஒதுக்கப்பட்ட நிதியை குறிக்கிறது. 789 என்ற எண்ணின் கீழ் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட SCP நிதியை குறிக்கிறது. அதேபோல் 796 என்ற எண்ணின் கீழ் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் குறிக்கிறது. இவை இரண்டும் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுவது தொடர்பாக தனி தலைப்பின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய நிதியை 793 என்ற எண்ணின் கீழ் தனியாக வகை படுத்தியுள்ளார்கள். இந்த நிதியிலிருந்து மகளிர் உரிமைத் தொகைக்கான நிதி எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, பட்டியலின மக்களுக்கு (789), பழங்குடி மக்களுக்கு (796) சேர்த்து 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி 4141 கோடி ரூபாய் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்ல. ஒன்றிய அரசு பட்டியலின் மக்களுக்காக கொடுத்த நிதியும் அல்ல. மாறாக, மாநில அரசு பொதுநிதியிலிருந்து ஒதுக்கிய பணம். அது பட்டியலின மக்களுக்கு தடையின்றி செல்வதை உறுதி செய்யும் வகையில் SCP-ன் கீழ் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் நடைமுறையல்ல. ஒன்றிய அரசு பொதுத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியிலும் குறிப்பிட்ட சதவீத நிதியை இதே போன்று SCSP நிதியாக பிரித்து ஒதுக்கும் நடைமுறை கடந்த 45 ஆண்டுகளாக இருக்கும் நடைமுறைதான். இது குறித்து 2023 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு அரசு விளக்கமளித்திருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றிய அரசு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கிய போது, அதில் 10,500 கோடியை SCSP நிதியாக ஒதுக்கியது. பிரதம மந்திரி வீட்டுவசதி(நகர்ப்புறம்) திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான 25,103 கோடியில் SCSP நிதியாக 4162 கோடியை ஒதுக்கியது. இவையெல்லாம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் திருடி ஒன்றிய அரசு பொதுத் திட்டங்களுக்கு பயன்படுத்தியதாக சொல்ல முடியுமா?

அதேபோல் தான் பொதுத்திட்டமான மகளிர் உரிமை நிதிக்காக 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 13,807 ரூபாய் ஆகும். அதில் 4141 கோடி ரூபாய் SCP நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும்.
இவையெல்லாமே மாநில அரசு தான் ஒதுக்கியிருக்கிறது. ஆதி திராவிடர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
‘Special Component Plan’ என்பது ஆதி திராவிடர்களுக்கான தனித்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிதான் என்று டாக்டர்.கிருஷ்ணசாமி உண்மைக்கு மாறாக பேசுகிறார். மேலும், பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியை தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகைக்காக பயன்படுத்தப்படுவதாக தவறாகப் பரப்புகிறார்.