யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தாண்டு ஜனவரியின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக சொல்லப்படும் தகவல் உண்மையானது டெல்லி போலீஸார் மறுக்கவில்லை.
பரவிய செய்தி
டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாள்களில் மாயமான சிறுமிகள் மற்றும் பெண்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன; சமூக ஊடகங்களில் பணம் கொடுத்து பரப்பப்படும் வதந்திகளை நம்பி மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று டெல்லி காவல்துறை வேண்டுகோள்.

விரிவான விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தாண்டு (2026) ஜனவரி மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் டெல்லியில் பெண்கள் குழந்தைகள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது பற்றிய செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியானது. காணாமல் போன 807 பேரில் 509 பேர் சிறுமிகள், பெண்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ’பாலிமர்’ செய்தித் தொலைக்காட்சி பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட்ட ’News Card’ ஒன்றில், ’டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாள்களில் மாயமான சிறுமிகள் மற்றும் பெண்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இவ்வாறு பணம் கொடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தவறான தகவல்கள் எல்லாம் வதந்தி மட்டுமே’ என்றும் டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
டெல்லியில் காணாமல் போனவர்கள் குறித்து வெளியான தகவல்களே தவறானது என்பது போல் செய்தி வெளியிட்டிருக்கிறது ’பாலிமர்’ ஊடகம். டெல்லியில் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போனது குறித்த பிற செய்திகளை தேடினோம். முதலில் ’PTI’ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், ’காசு வாங்கிக்கொண்டு (paid promotion) காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை மிகைபடுத்தி (hype) பரப்பி சுயலாபத்திற்காக பதற்றத்தை உண்டாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், டெல்லி போலீஸின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 807 பேர் காணாமல் போயிருப்பதாகவும், அதில் 191 குழந்தைகள் அடக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
After following a few leads, we discovered that the hype around the surge in missing girls in Delhi is being pushed through paid promotion. Creating panic for monetary gains won't be tolerated, and we'll take strict action against such individuals.
முதலில், நாம் இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலே 800-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதை டெல்லி போலீஸ் எவ்விடத்திலும் அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை என்பது தான் அது.
மேலும் தேடுகையில், ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகியிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இவ்வாறு பலர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 2024 ஜனவரி மாதம் 1,684 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்; 2025 ஜனவரி மாதம் 1,786 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்; இந்தாண்டு ஜனவரி மாதம் 2026 1,777 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

மேலும் இவ்வாறு காணாமல் போனவர்களில் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தான் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனவரி மாதம் 386 குழந்தைகளும், 2025 ஜனவரி மாதம் 392 குழந்தைகளும், இந்தாண்டு (2026) ஜனவரி மாதம் 383 குழந்தைகளும் காணாமல் போயியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கணிசமான குழந்தைகள் திரும்ப கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியின் கூடுதல் காவல் ஆணையர் (மத்திய மண்டலம்) மதுர் வர்மா கூறுகையில், ’கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனவரி மாதம் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, இந்தாண்டு ஜனவரியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஒரு அபாயமான சூழலை குறிக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.

’The Indian EXPRESS’ வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியின் படி கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் 1.8 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவற்றில் இன்னும் 50,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டைவிட இந்தாண்டு (2026) ஜனவரியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றும் இவ்வாறு குழந்தைகள் பெண்கள் காணாமல் போவதன் பின்னணியில் எவ்வித குற்றக்கும்பலின் தொடர்பும் இல்லை என்றும் சஞ்சய் தியாகி என்ற டெல்லி போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்தாண்டு ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக சொல்லப்படும் தகவல் உண்மையானது என்பதையும் அதனை டெல்லி போலீஸார் நேரடியாக மறுக்கவில்லை என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.
அதே வேளையில் இவ்வாறு நடப்பது புதிய அல்லது அபாயகரமான சூழ்நிலை அல்ல, ஆண்டுதோறும் இவ்வாறு தான் நடக்கிறது தான். அதை பணம் பெற்றுக்கொண்டு ‘மிகைப்படுத்தி (Hype)’ பரப்புகிறார்கள் என்றுதான் டெல்லி போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
முடிவு:
டெல்லி போலீஸ் கூறியதை திரித்து, காணாமல் போனவர்கள் குறித்து வெளியான தகவலே தவறானது என்று டெல்லி போலீஸ் சொல்லிவிட்டதாக தவறான செய்தியை ‘பாலிமர் ஊடகம்’ வெளியிட்டிருக்கிறது.