யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. பரவி வரும் வீடியோ ஏப்ரல் 11 ஆம் தேதி, Gingee Fort என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவாக்கியிருந்ததை பார்க்கமுடிந்தது. அப்போது திமுக தான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மே 10 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் பதவியேற்றக்கொண்ட அடுத்த நாளே செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறையினர் என்று ஒரு வீடியோவை தவெகவினர் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Gingee Fort என்ற பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ஏப்ரல் 11, 2026 அன்று செஞ்சியில் ரூபாய் 1 கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறையினர் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இது குறித்து மேலும் தேடியப் போது Chithirai One Media என்ற டிஜிட்டல் ஊடகத்திலும், செஞ்சியில் 4 டன் குட்கா பொருளை காவல்துறையினர் தீவைத்து எரித்தனர் என்று குறிப்பிட்டு ஏப்ரல் 14, 2026 அன்று இதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதிலிருந்து பரவி வரும் வீடியோ தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது என்றும், இந்த சம்பவம் நடைபெறும் போது திமுக தான் ஆட்சியில் இருந்தது என்பதும் உறுதியானது.
முடிவு:
எனவே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தவெகவினர் பரப்பும் தகவல் தவறானது.
