யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜூன் 10 அன்று புதுடெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியில் உள்ள இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முயற்சி செய்தனர். ஆனால் பால்கனியில் இருந்து குதித்த போது அவர்கள் உயிரிழந்தனர்.
பரவிய செய்தி
Air India விமான விபத்தில் மக்கள் பரிதாபமாக விமானத்திலிருந்து கீழே விழும் காட்சி..

விரிவான விளக்கம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ’ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் பரிதாபமாக விமானத்திலிருந்து கீழே விழும் காட்சி என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ”Apartment Fire | மளமளவெனப் பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்கக் கீழே குதித்த 3 உயிர்கள் பலி” என்ற தலைப்பில் ஜூன் 10, 2025 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து என்றும், தீ விபத்திலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Apartment Fire | மளமளவென பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்க கீழே குதித்த 3 உயிர்கள் பலி #delhi | #apartment | #fireaccident | #thanthitv pic.twitter.com/u40oVz2pAv
தினத்தந்தி ஊடகத்தில் ”டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து.. தப்பிக்கக் கீழே குதித்த 3 பேர் பலி” என்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காக 7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று குறிப்பிட்டிருந்தது.

அதே போல் தினகரன், Times Of India போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

முடிவு :
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் தப்பிக்கக் கீழே குதித்து உயிரிழந்த மூன்று பேரை, அகமதாபாத் விமான விபத்தோடு தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.