யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2023-ல் “லியோ” திரைப்படத்திற்கான படப்படிப்பின் போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், விஜய்யும், த்ரிஷாவும் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. இதனை கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தற்போது வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
கரூர் இறப்புகள் குறித்து துளியும் கவலை இல்லாமல் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் ஜோசப் விஜய்

விரிவான விளக்கம்
தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கரூரில் பொதுக் கூட்டம் நடத்தியபோது மக்கள் கூட்டம் அலைமோதியது. விஜயை காணவும், அவரது பேச்சைக் கேட்கவும் பல ஆயிரம் மக்கள் திரண்டனர். இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த குடும்பத்தினரை காண தவெக தலைவர், பொதுச் செயலாளர் உட்பட எந்த நிர்வாகிகளும் செல்லாதது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் இறப்புகள் குறித்து துளியும் கவலை இல்லாமல் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் விஜய் என்று அவர் விமானத்தில் விமானியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
கரூர் இறப்புகள் குறித்து துளியும் கவலை இல்லாமல் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் ஜோசப் விஜய் 😡 pic.twitter.com/nXxNemAmPw
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். spice jet airlines-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் புகைப்படம் பிப்ரவரி 26, 2023 அன்று பதிவாகியிருந்தது. அதில் விஜயுடன் நடிகை திரிஷாவும் இருப்பதை பார்க்கமுடிந்தது. மேலும் அந்த பதிவின் caption-ல் "எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு விஜய் மற்றும் திரிஷா ஆகியோருக்கு நன்றி என்றும், உங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே 2023ல் விமானத்தில் திரிஷாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை crop செய்து தற்போது பரப்புவது தெரியவந்தது.
இதை உறுதிப்படுத்த மேலும் தேடிய போது, Hindustan Times Tamil ஊடகத்தில் "Vijay: விமானியுடன் விஜய், த்ரிஷா... வைரலாகும் போட்டோ" என்ற தலைப்பில் பிப்ரவரி 26, 2023 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்ற போது, விஜய்யும், த்ரிஷாவும் விமானத்தில் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், இது 2023-ல் “லியோ” திரைப்படத்திற்கான படப்படிப்பின் போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், விஜய்யும், த்ரிஷாவும் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. இதனை கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தற்போது வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.