YouTurn

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படம் : தனியார் நிகழ்ச்சி என்று வதந்தி, மெயிலில் வந்த ஆதாரம் !

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படம் :  தனியார் நிகழ்ச்சி என்று வதந்தி, மெயிலில் வந்த ஆதாரம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre' மூலம் தான் "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப்டம்பர் 4-5, 2025 அன்று கருத்தரங்கம் நடத்தப்பட்டது. முதல்வர் கலந்து கொண்ட கருத்தரங்கம் தனியார் அமைப்பாலோ, கட்சியாலோ நடத்தப்பட்ட நிகழ்வு அல்ல.

பரவிய செய்தி

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளரங்கம் ஒன்றிற்கு திமுகவினர் பணம் செலுத்தி வாடகைக்கு எடுத்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா அவர்கள் படத்தை திறந்தார் முதல்வர். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை மீண்டும் எடுத்து சென்று விட்டனர் என்றே இந்த செய்தி இருந்திருக்க வேண்டும்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 05 மற்றும் 06 அன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பெரியாரின் உருவப் படத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். 


இந்நிலையில் “ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சார்பில் பெரியார் புகைப்படம் எதுவும் நிறுவப்படவில்லை. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சார்ந்த ஒரு இடத்தை, ஒரு நாளைக்கு £210 என்றும், ஒரு மாணவருக்கு £70 என்றும், பணம் செலுத்தினாலே, அங்கு நிகழ்ச்சி நடத்த அறை தந்து விடுவார்கள். இவ்வாறு வாடகைக்கு எடுத்து தான் அங்கு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.


இதனை பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் தங்கள் பக்கங்களில் பதிவு செய்துள்ளதை காண முடிகிறது. 


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய, யூடரன் தரப்பில் இருந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியின் 'Asian Studies Centre'-க்கு கீழே குறிப்பிடப்பட்ட நான்கு கேள்விகளுடன் மெயில் செய்திருந்தோம்.


1. மாநாட்டை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தான் ஏற்பாடு செய்ததா? 

2. இல்லையென்றால், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் விவரங்களை வழங்க முடியுமா? 

3. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் உருவப்படத்தை பல்கலைக்கழகம் பாதுகாக்குமா? 

4. அப்படியானால், அந்த உருவப்படம் எங்கே வைக்கப்படும்?


அதற்கு பதிலளித்த அவர்கள், "ஆம், இந்த கருத்தரங்கம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre' மூலம் தான் நடத்தப்பட்டது" என்று நமக்கு உறுதி செய்துள்ளனர். மேலும் "பெரியார் படம், செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் தான் பொருத்தப்படும்" என்றும் உறுதி செய்துள்ளனர்.


1925-ல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு நூற்றாண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கல்லூரிகளான செயின்ட் ஆண்டனிஸ் (St Antony’s College, University of Oxford) மற்றும் பலியோல் (Balliol College, University of Oxford) இணைந்து, "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப்டம்பர் 4-5, 2025 அன்று சர்வதேச கருத்தரங்கை அங்கு நடத்தியுள்ளனர். 


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் (Asian Centre for Research) ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் ஜிம் மாலின்சன் (Jim Mallinson, University of Oxford), மற்றும் பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி (Faisal Devji - St Antony's College) ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர் என்பதை, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். 



மேலும் அங்கு நடைபெற்ற "Self-Respect Movement and Its Legacies" என்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக, அங்கு தந்தை பெரியாரின் உருவப்படம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வது குறித்து செப்டம்பர் 2ம் தேதி 'Asian Studies Centre' ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இதனை முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 05 அன்று பதிவு செய்துள்ள புகைப்படங்களின் மூலமும் உறுதி செய்ய முடிகிறது. 

#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு!

#தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!

இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் திரு. @ARV_Chalapathypic.twitter.com/YgyFzPsoLP

— M.K.Stalin (@mkstalin) September 5, 2025


இந்நிலையில், இந்த கருத்தரங்கை, “Social Outcomes Conference 2025” என்ற தலைப்பில், ‘Mario Calderini’ என்பவரின் தலைமையில், அங்கு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முதல்வர் கலந்து கொண்ட கருத்தரங்கம் தனியார் அமைப்பாலோ, கட்சியாலோ நடத்தப்பட்ட நிகழ்வு அல்ல. கருத்தரங்கம் தொடர்பான அட்டவணை மற்றும் நிகழ்ச்சியில் செயின்ட் ஆண்டனிஸ், பலியோல் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் லோகோக்கள் இடம்பெற்றுள்ளது.



தனியாரால் நடத்தப்படும் நிகழ்வுகளில் ஆக்ஸ்போர்ட் உடைய லோகோ இடம்பெறாது. பெரியார் படம் ஆக்ஸ்போர்டின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் வைக்கப்படும் என்றும் மெயில் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நிகழ்ச்சி முடிந்த பிறகு படத்தை அங்கிருந்து அகற்றி விடுவார்கள் என்று பரப்பப்பட்ட தகவல்களும் பொய்யானவை என்பதை உறுதிசெய்ய முடிகிறது.


 முடிவு: 


நம் தேடலில், “ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சார்பில் பெரியார் புகைப்படம் எதுவும் நிறுவப்படவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சார்ந்த ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து தான் அங்கு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்” என்று பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.