யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தி எதிர்ப்பு வாரியத்தின் செயலாளராக இருந்த கி.ஆ.பெ.-விடம் போராட்டத்திற்கு திரட்டப்பட்ட நிதியை திருமலைசாமி என்பவரிடம் கொடுக்க கூறி எழுதப்பட்ட கடிதம் தவறாக திரித்து பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பெரியார் தொடர்பான சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
#கிஆபெ-விடமிருந்து நேக்காக ரூ.100 ஆட்டைய போட்ட #ஈவெரா
1938 pic.twitter.com/L7dfbhV1pe
இந்நிலையில், கி.ஆ.பெ.விஸ்வநாதத்திடம் இருந்து 100 ரூபாயை பெரியார் பெற்றதாக ‘ஐ வலையொளி மகிழன்’ என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”அன்புள்ள தோழர் விஷ்வநாதம் அவர்களுக்கு, இன்று நான் இங்கு வந்து சேர்ந்தேன். தோழர் திருமலை சாமியாவர்களிடம் ரூ.100 கொடுத்திருப்பீர்களென்று நினைக்கிறேன். நான் அவரிடம் தங்களிடம் ரூ.100 வாங்கிக் கொள்ளும்படி கூறிவந்தேன். தங்களிடமும் கூறிவந்தேன். அதன்படியாவும் நடந்திருக்குமென்று நினைக்கிறேன்” என்றுள்ளது.
தாத்தா கி. ஆ.பெ விஸ்வநாதத்திடம் நேக்காக 100 ரூபாய் ஆட்டைய போட்ட ஈ.வெ.ரா 😏 pic.twitter.com/OLjYLHJATo
உண்மை என்ன?
பெரியார் எழுதிய கடிதத்தில் ‘குடி அரசு’ என பெரியார் நடத்திய பத்திரிகையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ’ஜூலை, 12, 1938’ என்ற தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு குடி அரசு இதழில் வெளியானவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
1938 குடி அரசு இதழின் தொகுப்பு இரண்டு பகுதிகளாக வெளியாகியுள்ளது. பகுதி ஒன்றில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பற்றிய குறிப்புகள் இருப்பதை காண முடிந்தது.
ராஜாஜி தலைமையிலான மதராஸ் மாகாண அரசு 1938ல் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என ஆணை வெளியிட்டபோது, அதற்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு வாரியம் (Anti-Hindi Command) ஒன்று அமைக்கப்பட்டது. இதன் தலைவராகச் சோமசுந்தர பாரதியும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பெரியார் அதில் உறுப்பினராக இருந்தார்.

தமிழ்நாடு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், தீக்குளிப்புகளும்-தஞ்சை நலங்கிள்ளி
இவ்வமைப்பிற்குப் பண உதவி செய்வது தொடர்பாகப் பெரியார் ‘15.05.1938’ குடி அரசு இதழில் தலையங்கம் எழுதியுள்ளார். ’நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியான அத்தலையங்கத்தில், “பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும் ” எனக் கூறியுள்ளார் (குடி அரசு 1938, பகுதி 1, பக்.322).
குடி அரசு 1938, பகுதி 1, பக்.322.
அதேபோல், ‘தொண்டர்களே - சென்னை செல்க’ என்ற தலைப்பில் ’22.05.1938’ அன்று வெளியான குடி அரசு தலையங்கத்திலும் “வெளி நாட்டு நண்பர்கள் பலர் தங்கள் அனுதாபத்தை தெரிவித்து நம்மை ஊக்கி வருகிறார்கள். ஆனாலும் காரியத்திற்கு பொருளாதார உதவியும் வேண்டியிருப்பதால் இந்தியாவுக்கு வெளியிலும் நம் மாகாணத்துக்கு வெளியிலும் உள்ள தமிழ் மக்கள் தமிழ் அபிமானிகள் தகுந்த பொருளுதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். பொருளுதவி செய்பவர்கள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக் காரியதரிசியான தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்கள் திருச்சி என்ற விலாசத்துக்கு அனுப்பிக் கொடுக்கக் கோருகிறோம் ” எனக் குறிப்பிட்டுள்ளார் (குடி அரசு 1938, பகுதி 1, பக்.342).
குடி அரசு 1938, பகுதி 1, பக்.342.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பல நூறு பேர் சிறை சென்றனர். பெரிய அளவில் நடந்த இப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் செலவு செய்ய வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நிதி திரட்டப்பட்டது. போராட்டம் தொடந்து நடைபெற பண உதவி தேவை என பெரியார் பலமுறை குடி அரசில் எழுதியும் மேடைகளில் பேசியும் வந்துள்ளார். இந்த பணத்தை கி.ஆ.பெ.விசுவநாதம் தான் நிர்வகித்துள்ளார்.
அப்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குச் செலவு செய்யச் செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதத்திற்குப் பெரியார் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் திருமலைசாமி என்பவரிடம் கொடுக்கும்படிதான் கூறியுள்ளார்.
இவற்றில் இருந்து பெரியாரும் தனது சொந்த செலவிற்குப் பணம் கேட்கவில்லை. கி.ஆ.பெ.-வும் தனது சொந்த பணத்தைக் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. பெரியாரின் கடிதம் திரித்து பரப்பப்படுகிறது.
முடிவு:
கி.ஆ.பெ.விஸ்வநாதத்திடம் பெரியார் ரூ.100 பெற்றதாகப் பரவும் கடிதம் குறித்த தகவல் திரித்து பரப்பப்படுகிறது. 1938-ல் இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டது. அதன் செயலாளராக கி.ஆ.பெ.விஸ்வநாதம் இருந்தார். அவ்வாரியத்திற்கு திரட்டப்பட்ட நிதியை அவர்தான் நிர்வகித்தார். அப்பணத்தை கொடுக்கும்படிதான் பெரியார் கடிதம் எழுதியுள்ளார். பெரியாரும் சொந்த செலவிற்கு கேட்கவில்லை, கி.ஆ.பெ.-வும் சொந்த பணத்தை தரவில்லை.
ஆதாரம்:
தமிழ்நாடு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், தீக்குளிப்புகளும்-தஞ்சை நலங்கிள்ளி
