யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல் வீடியோ குழந்தைகள் உணவு கொடுப்பவரிடம் அழுதுகொண்டே உணவை கெஞ்சி வாங்கும் காட்சி. இரண்டாவது வீடியோ ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் பாலஸ்தீன பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய காரை, இறந்தவர்களின் உடல்களை எடுப்பதற்காக எடுத்து செல்லும் காட்சி.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் காரணமாக காசா கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது. பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாக ஐநா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் Mossad Commentary என்ற எக்ஸ் பக்கத்திலிருந்து, பாலஸ்தீனத்தில் நடக்கும் காட்சிகளில் ஒத்திகை செய்யப்பட்டவை என்று கூறி 2 வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
The Gaza production team pic.twitter.com/Pse19luRFF
உண்மை என்ன?
Mossad Commentary என்ற எக்ஸ் தள பக்கம் உண்மையா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது Euro News ஊடகத்தின் இணையதள பக்கத்தில், "இஸ்ரேல்-ஹமாஸ் போர்: போலி மொசாட் கணக்கு இணையத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது", என்ற தலைப்பில் நவம்பர் 7, 2023 அன்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதில் பரவி வரும் புகைப்படத்தை வெளியிட்ட Mossad Commentary எக்ஸ் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதில் பெரும்பாலான பதிவுகள் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து, பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இதில் வரும் பதிவுகள் பல சமூக ஊடக பயனர்களையும், பத்திரிக்கையாளர்களையும் கூட இது முறையான கணக்கு என்ற நம்ப வைப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து பரவி வரும் இரண்டு வீடியோக்கள் குறித்து தேடி பார்த்தோம். முதலில் குழந்தைகள் உணவு கொடுப்பவரிடம் அழுதுகொண்டே உணவை கெஞ்சி வாங்கும் வீடியோவை தேடினோம். அப்போது துபாய் ஊடகமான AL ARABIA ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மே 3ஆம் தேதி ”காசா பகுதியில் உதவிகள் துண்டிக்கப்பட்டதால், பட்டினியால் அழும் குழந்தைகள்” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோ வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதே போல் இரண்டாவது வீடியோ குறித்தும் தேடி பார்த்தோம். அப்போது mahmoud__abusalama என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த வீடியோ மே 16ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அது ஆம்புலன்ஸ் கிடைக்காத காரணத்தால் பாலஸ்தீன பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய காரை, இறந்தவர்களின் உடல்களை எடுப்பதற்காக எடுத்து செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை அந்த பத்திரிக்கையாளரே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முடிவு:
நம் தேடலில், மனிதாபிமானம் இல்லாமல் சிலர் பாலஸ்தீனத்தில் நடக்கும் காட்சிகளில் 90% ஒத்திகை செய்யப்பட்டவை என்று கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
