யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல. கடந்த 2015 மற்றும் 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், சென்னைக்கு தெற்கே 430 கி.மீ தொலைவில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. எனவே மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருவது இந்நிலையில் சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் படகுகளில் மக்களை அழைத்து செல்வது போன்ற ஒரு புகைப்படமும், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளநீரில் உணவு வழங்குவது போன்ற ஒரு புகைப்படமும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படங்களை “Google Reverse Image Search” பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“The Economic Times” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கடந்த 2015 டிசம்பர் 15 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “2015 டிசம்பர் 03 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்த மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக உடனடியாக ரூ.1,000 கோடியை விடுவிப்பதாக அறிவித்தார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று மற்றொரு புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2023 டிசம்பரில் “Reuters“ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “மிச்சாங் புயல் சென்னையைத் தாக்கிய நான்கு நாட்களுக்குப் பிறகும் உணவு மற்றும் பொருட்களை வழங்குவதற்காக தன்னார்வலர்கள் தேங்கி நிற்கும் நீரில் நடந்து சென்றனர்“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பரவி வரும் இரண்டு புகைப்படங்கள் குறித்து மற்ற ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதையும் இங்கே, இங்கே காண முடிகிறது. இந்நிலையில் பழைய புகைப்படங்களை தற்போது நடந்த சம்பவம் போல் விமர்சனம் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் புகைபடங்கள் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல. கடந்த 2015 மற்றும் 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.