யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்தும் ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
#sindooroperation #happydiwali இன்னைக்கு ட்ரில் என்றுதானே தகவல்.. ஆனால் த்ரில் என்று சொல்லவே இல்லை... வெற்றி நமதே..... #IndiaPakistanWar

மசூதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல்

விரிவான விளக்கம்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவுவதாக செய்திகள் வந்தகொண்டிருந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரித்தார். பிரதமர் மோடியும் அடுத்தடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தினார். மேலும், இந்தியாவில் 244 மாவட்டங்களில் போர்க் காலத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றிய போர்க் கால ஒத்திகைகள் (mock drill) நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ‘Operation Sindoor’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘Operation Sindoor’-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என சில வீடியோக்கள் பாஜகவினர் உள்ளிட்டவர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
#sindooroperation#happydiwali
இன்னைக்கு ட்ரில் என்றுதானே தகவல்..
ஆனால் த்ரில் என்று சொல்லவே இல்லை...
வெற்றி நமதே.....#IndiaPakistanWar pic.twitter.com/B0LWN7yKN9
மசூதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் pic.twitter.com/jss9iJyYFh
உண்மை என்ன?
Claim 1: ‘Operation Sindoor’ன் போது இந்திய இராணுவம் பாகிஸ்தானில் குண்டுகள் வீசியதாக பரப்பப்படும் வீடியோ.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘Al Jazeera English’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. 2023 நவம்பர் மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், வட காஸாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனை வளாகம் அருகில் இஸ்ரேல் குண்டு வீசியதாக குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து இந்த வீடியோ 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் வட காஸாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
Claim 2: ‘Operation Sindoor’ன் போது பாகிஸ்தானில் மசூதியில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ.
உண்மை: பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், ’DD India’ ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2024 அக்டோபர் 2 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவின் அடிக்குறிப்பில், ‘நெவதிம் விமான தளத்தை குறிவைத்து ஈரானிய ஏவுகணைகள் வீசப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் தேடியபோது, ’ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலிய இலக்குகளை வெற்றிகரமாக தாக்கின’ என்று குறிப்பிட்டு 2024 அக்டோபர் 1 அன்று ’Globe Eye News’ வெளியிடப்பட்ட செய்தியைக் காணமுடிகிறது. ‘BBC’ செய்தி நிறுவனமும் இஸ்ரேலை ஈரான் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாக இந்த வீடியோவை செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

இதிலிருந்து இந்த வீடியோ கடந்த 2024 அக்டோபர் மாதம் ஈரான் இஸ்ரேலை ஏவுகணைகள் கொண்டு தாக்கியபோது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
இஸ்ரேல் நாட்டிலும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலும் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை தற்போது பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்தும் ‘Operation Sindoor’-வுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.