யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2019-ல் ‘மதுபோதைக்கு 47 சதவீத ஆண்கள் அடிமையாக உள்ளனர். நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு மது விற்கும் அரசே பொறுப்பு என ஏன் அறிவித்து தண்டனை விதிக்கக்கூடாது?’ என அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மோகன் C லாசரஸ் பாதிரியார் கடந்த 2019-ல் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
திமுக அரசு பாவம் செய்து கொண்டிருக்கிறது. இனி திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்தக் கூடாது.
விரிவான விளக்கம்
மோகன் C லாசரஸ் பாதிரியார் திமுக அரசை விமர்சித்து பேசுவதைப் பாருங்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் “அரசு குற்றம் செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு பாவம் செய்து கொண்டிருக்கிறது. மக்களை பாவம் செய்ய தூண்டுகிறது என்று நீதிபதி கூறியிருக்கிறார். இதான் உண்மை. மதுபோதைக்கு 47 சதவீத ஆண்களை அடிமையாக மாற்றியுள்ளது இந்த அரசாங்கம்” என்று அவர் செய்தித்தாள் ஒன்றைப் பார்த்து பேசுவதை தெளிவாகக் கேட்க முடிகிறது.
அரசு பாவம் செய்துக்கொண்டிருக்கிறது...
#MohanCLazarus | #tngovt pic.twitter.com/gtoJZL4k4F
இணையத்தில் வைரலாகும் மோகன் C லாசரஸ் பாதிரியார் பேச்சு!
மேலும் இது குறித்து ‘Udane Vizhi Thamizha’ என்ற யூடியூப் பக்கத்திலும் இது தற்போது பேசிய வீடியோ தான் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் மோகன் C லாசரஸ் குறிப்பிடும் செய்தி குறித்து ஆய்வு செய்ததில், இது கடந்த 2019-ல் சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதை அறிய முடிந்தது.
‘இந்து தமிழ் திசை‘ ஊடகத்தில் இது குறித்து கடந்த 2019 மார்ச் 27 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், “தமிழகத்தில் சொந்த மக்களுக்கு மதுபான விற்பனையை மாநில அரசே நடத்தி அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் 31,750 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதும், மாநில பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது என்பது துரதிருஷ்டவசமானது.
இதுதவிர தேசிய சுகாதார பணிகள் துறை ஆய்வுபடி, 47% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த குற்ற சம்பவங்களுக்கு மதுவை விற்கும் தமிழக அரசை பொறுப்பாக்க வேண்டும். குற்ற சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன், அபராதமும் விதிக்க முடியும் “ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, “கோவையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் தற்கொலை செய்த வழக்கில் வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் மதுவை விற்கும் தமிழக அரசை இந்த குற்றச் சம்பவங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்“ என்று குறிப்பிட்டு தந்தி டிவி ஊடகத்திலும் கடந்த 2019-ல் செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

எனவே கடந்த 2019-ல் ‘மதுபோதைக்கு 47 சதவீத ஆண்கள் அடிமையாக உள்ளனர். நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு மது விற்கும் அரசே பொறுப்பு என ஏன் அறிவித்து தண்டனை விதிக்கக்கூடாது?’ என அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மோகன் C லாசரஸ் பாதிரியார் கடந்த 2019-ல் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், மோகன் C லாசரஸ் பாதிரியார் அரசை விமர்சித்து பேசுவதாகப் பரவும் வீடியோ, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.