யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2022-ல், குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் கலை ஆசிரியை ஒருவர் மாணவ மாணவிகளிடம் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சின்னத்தை பற்றியும், அந்த மதத்தின் கருத்துகளை பற்றியும் எடுத்துக்கூறியதாக புகார் வந்ததையடுத்து அவர் அப்போதே பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
பரவிய செய்தி
மாணவிகளிடம் பைபிளை படிக்க சொன்னபோது நாங்கள் இந்துக்கள் பகவத் கீதை தான் படிப்போம் என்று சொன்ன மாணவியிடம் பகவத்கீதை கெட்டது பைபிள்தான் நல்லது என்று சொல்லியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம்!
குமரியில் பள்ளியில் மதமாற்றம் செய்வதாக மாணவி புகார்!
தலைமை ஆசிரியர் முன்8 போலீசார் விசாரணை.

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பைபிளை படிக்க சொன்னதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மாணவி காவல்துறையினரிடம் ஆசிரியர் செய்த செயல்களை கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மாணவிகளிடம் பைபிளை படிக்க சொன்னபோது நாங்கள் இந்துக்கள் பகவத் கீதை தான் படிப்போம் என்று சொன்ன மாணவியிடம் பகவத்கீதை கெட்டது பைபிள்தான் நல்லது என்று சொல்லியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம்!
குமரியில் பள்ளியில் மதமாற்றம் செய்வதாக மாணவி புகார்!
தலைமை ஆசிரியர் முன்8 போலீசார் விசாரணை. pic.twitter.com/SxUktbPNcO
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து தேடிப் பார்த்ததில், சமயம் தமிழ் ஊடகத்தில் ஏப்ரல் 13, 2022 அன்று ”அரசு பள்ளியில் மதமாற்றம்?... மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு..!” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு, கிறிஸ்தவ மத பிராத்தனைகளை சொல்லி பிராத்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமையாசிரியர் முன், காவல்துறையினர் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, தினத்தந்தி ஊடகத்தில் ”அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்” வெளியான செய்தி ஒன்றையும் பார்க்கமுடிந்தது. அதில் மாணவிகளிடன் புகார் அடுத்து நடைபெற்ற விசாரணையில், 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் தையல் கலை ஆசிரியை ஒருவர் மத பிரசாரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், இது கடந்த 2022ல் குமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் கலை ஆசிரியை ஒருவர் ஒரு மதத்தை பற்றி மாணவிகளிடம் எடுத்துக்கூறியதாக புகார் வந்ததையடுத்து அவர் அப்போதே பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பழைய சம்பவத்தை தற்போது நடந்தது போல, மதவாதத்தை தூண்டும் வண்ணம் சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.