யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் இருந்த போது, கடனுக்கு பீர் தரும் படி கேட்டு டாஸ்மாக் ஊழியரை 3 வாலிபர்கள் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
எந்த ஆட்சியிலும் நடைபெறாதது..
தவெக ஆட்சியில் தலைவிரித்து ஆடுது..
விரிவான விளக்கம்
டாஸ்மாக் கடை ஒன்றில் பணிபுரியும் பணியாளர்களை மூன்று நபர்கள் கடைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘எந்த ஆட்சியிலும் இது போன்ற அராஜக சம்பவங்கள் நடைபெற்றதில்லை. ஆனால் தற்போது தவெக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன’ என்று அதிமுக ஆதரவு பக்கங்கள் மூலமாக பரப்பப்படுகிறது.
எந்த ஆட்சியிலும் நடைபெறாதது..
தவெக ஆட்சியில் தலைவிரித்து ஆடுது.. @CMOTamilnadu#நல்லா_வாயில_வருது pic.twitter.com/whHhGoeTd4
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Sun News’ ஊடகத்தின் யூட்யூப் பக்கத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.
2021 பிப்ரவரி மாதம் வெளியாகியுள்ள இந்த செய்தியில், ‘சிதம்பரம் அருகே உள்ள டாஸ்மாக்-ல் கடனுக்கு பீர் தரும் படி கேட்டு, அந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த சங்கர் என்பவரை மூன்று வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த சம்பவம் குறித்து ’தினத்தந்தி’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இவ்வாறு டாஸ்மாக் ஊழியர் சங்கர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரம் பகுதியை சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், சங்கரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று ஒரு மணிநேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, டாஸ்மாக் ஊழியரை கடைக்குள் புகுந்து தாக்கும் இந்த வீடியோ 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்த சம்பவத்தை தற்போது தவெக ஆட்சியில் நடந்ததாக சொல்லி அதிமுகவினர் தவறாக பரப்பி வருகிறார்கள்.