யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காஷ்மீரில் இந்துக்களை சுட்ட மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர், அவர்களை துணியில் கட்டி இழுத்து செல்லும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
காஷ்மீர்ல இந்துக்களை சுட்ட மூன்று தீவிரவாதிகளை புடிச்சிட்டாங்களாம்... என்ன... புடிச்சு கொண்டு போகும்போதே பாதி தான் கொண்டு போறானுங்க... அதுவும் தூளியில கட்டி...
விரிவான விளக்கம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டஸ் பிரண்ட்’ பொறுப்பேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் இந்துக்களை சுட்ட மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர், அவர்களை துணியில் கட்டி இழுத்து செல்லும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காஷ்மீர்ல இந்துக்களை சுட்ட மூன்று தீவிரவாதி புடிச்சிட்டாங்களாம்...
என்ன... புடிச்சு கொண்டு போகும்போதே.. பாதி தான் கொண்டு போறானுங்க... அதுவும் தூளியில கட்டி...😍
தற்போது வந்த.. முழு செய்தி...
🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🔱🔱🔱👇👇👇https://t.co/2aTTsgbknv pic.twitter.com/C3BORfgEcm
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2019 பிப்ரவரி 17 அன்று ‘Gokul R’ என்பவரின் யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ “புல்வாமா தாக்குதல்: பார்க்கப்படாத காணொளி” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும் அதில், “இந்த காணொளி இந்திய வீரர்களால் பதிவு செய்யப்பட்ட புல்வாமா தாக்குதல் காட்சிகளைப் பற்றியது. துணிச்சலான CRPF வீரர்களுக்கு வணக்கங்கள்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பலரும் “காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர், அவர்களை துணியில் கட்டி இழுத்து செல்லும் காட்சியைப் பாருங்கள்” என்று கூறி இந்த பழைய வீடியோவை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர் என்று கூறி பரவும் வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.