யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தவெக கொடிக்கம்பம் இடிக்கப்படும் இந்த வீடியோ 2025 ஜனவரி மாதமே அதாவது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது. இதுக்கும் திமுக தான் காரணமாடா கூந்தல் பசங்களே…
விரிவான விளக்கம்
கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் அருகில் உள்ள ஏமூர் புதூர் என்ற ஒரே ஊரைச் சேர்ந்த 6 பேரும் அடக்கம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது CBI விசாரித்து வருகிறது.
இந்நிலையில், விஜய் உருவப்படம் வரையப்பட்ட தவிர கட்சியின் கொடிக்கம்பம் ஒன்று இடித்து தள்ளப்படும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியான ஆத்திரத்தில் மக்கள் தவெகவின் கொடி கம்பத்தை இடித்து அகற்றுவதாக’ திமுக ஆதரவாளரால் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது.
இதுக்கும் திமுக தான் காரணமாடா கூந்தல் பசங்களே... pic.twitter.com/1MtHsPtDz1
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe- களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘ABP நாடு’ ஊடகத்தின் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் காண முடிந்தது.
2025 ஜனவரி 26ஆம் தேதியே வெளாயாகியுள்ள இந்த வீடியோ ‘ABP நாடு’ ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊர் என்ன காரணத்திற்காக இடிக்கப்பட்டது என்ற எந்த விவரமும் அதில் கொடுக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என கடந்த 2025 ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி 2025 ஜூலை வரையில் இவ்வாறு இடையூறாக இருந்த கொடிக்கம்பங்களில் 31 சதவீதம் அகற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவின் ஓர் அங்கமாகவே இந்த கொடிக்கம்பம் இடிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தவெக கொடிக்கம்பம் இடிக்கப்படும் வீடியோ கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது தெரியவருகிறது.
முடிவு:
தவெக கொடிக்கம்பம் இடிக்கப்படும் பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான ஆத்திரத்தால் கொடிக்கம்பம் இடிக்கப்பட்டது தவறாக பரப்பப்படுகிறது.