யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்னாள் 2016 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
சபாநாயகர் அப்பாவுவை தூக்கி வெளியே எறிந்த CRPF வீரர்கள்..நீ யாரா வேணா இரு உள்ள அத்துமீறினா குப்பை தான்..போ வெளியே என்று தூக்கி வெளிய எறிந்த ஜவான்கள்..சிறப்பான சம்பவம்..

விரிவான விளக்கம்
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து கடந்த மே 04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நெல்லை இராதாபுரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் அவரை CRPF வீரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் செய்தி வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
சபாநாயகர் அப்பாவுவை தூக்கி வெளியே எறிந்த CRPF வீரர்கள்..நீ யாரா வேணா இரு உள்ள அத்துமீறினா குப்பை தான்..போ வெளியே என்று தூக்கி வெளிய எறிந்த ஜவான்கள்..சிறப்பான சம்பவம்.. pic.twitter.com/UNv96nadj8
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களை கொண்டும், ‘அப்பாவு வாக்கு எண்ணிக்கை மையத்தில் போராட்டம்’ என்ற Keywords கொண்டும் இணையத்தில் தேடுகையில், ’புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இதே வீடியோவைக் காணமுடிந்தது.
2016 மே மாதம் வெளியான இந்த செய்தியில், ”நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறி, அதிகாரிகளுடன் அப்பாவு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவரை துணை ராணுவ படையினர் குண்டுகட்டாக அங்கிருந்து வெளியேற்றினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ‘தினமணி’ செய்தித்தளத்திலும் 2016ஆம் ஆண்டிலே செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்னாள் 2016 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது.
முடிவு:
2016 ஆண்டு எடுக்கப்பட்ட 10 ஆண்டுகள் பழைய வீடியோவை, தற்போதைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அப்பாவு-வை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து CRPF வீரர்கள் வெளியேற்றியதாக தவறாக பரப்புகிறார்கள்.