யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்று கூறி “நியூஸ் 18 தமிழ்நாடு” வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 12 பேர் நேற்று (ஏப்ரல் 09) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்று கூறி “நியூஸ் 18 தமிழ்நாடு” வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஊடகங்களில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடியதில், எந்த ஊடகத்திலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்று செய்தி வெளியிடப்படவில்லை.
எனவே பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது வெளிவந்த செய்தி அல்ல என்பதை அறிய முடிந்தது.
“நியூஸ்18 தமிழ்நாடு” யூடியூப் பக்கத்தில், “Breaking News | அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது! | Minister Senthil Balaji Arrested” என்ற தலைப்பில் கடந்த 2013 ஜூன் 14 அன்றே பரவி வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தற்போது வெளியிடப்பட்ட செய்தி என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: அண்ணாமலையைக் கேள்வி கேட்கச் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு கொடுத்ததாக வதந்தி !
இதற்கு முன்பும் செந்தில் பாலாஜி குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. அப்போதே ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: “அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் தான்” என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாக போலி நியூஸ் கார்டு!
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில், முக்கியக் குற்றவாளி மரணம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கை பல மாதமாகியும் வரவில்லை! ஏன் ?
முடிவு:
நம் தேடலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி, 2023-ல் வெளியிடப்பட்ட பழைய செய்தி என்பதை அறிய முடிகிறது.