யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2020-ல் அரியலூர் மாவட்டத்தில் அப்போதைய திமுக மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது அரங்கமேடையில் இருந்த ஜி.கே.மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டதாகக் கூறி தமாகா ஆதரவாளர்கள் அவரை முற்றுகையிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்திக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சமீபத்தில் பேசினார்.
அப்போது அவர், “எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் முதல் சுற்றுப்பயணத்தில் அதிமுகவினர் பாதிபேரை காணவில்லை. 2வது சுற்றுப்பயணத்தில் பேருந்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வருவார். செங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக அமித் ஷாவை சந்தித்து வந்துள்ளார். பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐ.சி.யூ.வில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று விமர்சித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் போது அங்கு இருந்த மக்களால் சூழப்பட்டு முற்றுகையிடுவது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
ஊரெல்லாம் செருப்படி வாங்குறது இதுல வாய் வேற 😂😂 pic.twitter.com/lr2exH1pHB
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
அரியலூர் மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2020ல் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரது வாகனத்தை தமாகாவினர் வழிமறித்து முற்றுகையிட்டனர்.
திருமானூர் பேருந்து நிலையம் அருகே ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடையில் உதயநிதி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, அந்த அரங்க மேடையைச் சீரமைப்பதற்காக, ஒன்றியக்குழு தலைவர் நிதியிலிருந்து சுண்ணாம்பு பூசும் பணிகள் நடைபெற்று வந்தன. சுண்ணாம்பு பூசும் பணிகளின்போது, கடந்த 2020 டிச.24 அன்று அரங்க மேடையில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார் பெயர் அழிந்துவிட்டது.
இதனால் திருச்சி சாலையில் உதயநிதியின் வாகனத்தை மறித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை “இந்து தமிழ் திசை” ஊடகத்தில் கடந்த 2020-ல் வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
இதனை ‘தினமலர்’ ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் மூலமும் அறிய முடிகிறது.
இந்நிலையில், கடந்த 2020-ல் அரியலூர் மாவட்டத்தில் அப்போதைய திமுக மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்ட மக்கள் எனப் பரவும் புகைப்படம், கடந்த 2020-ல் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.