யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொங்கு மண்டலத்தில் சுவர் விளம்பரத்தில் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம், 2021ஆம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது எப்போது, எங்கே, யாரால் அழிக்கப்பட்டது என்று விவரங்கள் இல்லை.
பரவிய செய்தி
திருமாவளவன் பெயர் நீக்கம்
இவனுங்கதான் சமத்துவ கட்சியாம்.
கொங்கு மண்டலத்தில் இந்த பேரை எழுதி வைத்தால் ஓட்டு விழுகாதுன்னு பெயரை அழித்து விட்டிருக்கானுங்க திமுக சமூக நீதி கட்சினு பித்தலாட்டம் பன்றவனுங்க.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் சுவர் விளம்பரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு மேல எழுதப்பட்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்படியான எந்த செய்தியும், எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது 𝙼 𝚘 𝚘 𝚗 என்ற எக்ஸ் பக்கத்தில் ”படுபாவிகளா சனாதனத்தை அழிக்க பொறந்த அழி லப்பர் டா அவுரு! அந்த மனுசன் பெயர அழிக்க எப்படி டா உங்களுக்கு மனசு வந்துச்சு” என்று குறிப்பிட்டு, மார்ச் 27, 2021 அன்று பரவி வரும் புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
படுபாவிகளா சனாதனத்தை அழிக்க பொறந்த அழி லப்பர் டா அவுரு! அந்த மனுசன் பெயர அழிக்க எப்படி டா உங்களுக்கு மனசு வந்துச்சு. pic.twitter.com/9stcFwFsfj
இதையடுத்து இந்த புகைப்படம் குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். ஆனால் இது எப்போது, எங்கே, யாரால் அழிக்கப்பட்டது என்று விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, கொங்கு மண்டலத்தில் சுவர் விளம்பரத்தில் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம், 2021ஆம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருவது தெரியவந்தது.