யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பஹல்காம் தீவிரவாதி என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம், கடந்த 2022-ல் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தாலிப் ஹூசைன் மற்றும் ஃபைசல் அஹ்மது தார் எனும் பெயர்களுடைய லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் ரியாசி மாவட்டத்தின் துக்சான் கிராம மக்களின் உதவியோடு கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்.
பரவிய செய்தி
காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி, பாஜக நிர்வாகி. ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் பிடிபட்டார். ஏ.கே.47 துப்பாக்கியுடன் பிடிபட்ட பயங்கரவாதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. காந்தியை கொலை செய்த கூட்டம் இந்திய மக்களை கொலை செய்கிறது. பாஜக அரசே பதவி விலகு!

விரிவான விளக்கம்
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, சமீப காலமாகவே இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 26 சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி பிடிபட்டான், அவன் ஒரு பாஜக நிர்வாகி என்று கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி, ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் பிடிபட்டார் என்று கூறி பரவும் புகைப்படம் கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.
“Hindustan Times”, இணையப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கடந்த 2022 ஜூலை 03 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “லஷ்கர்-இ-தொய்பா தளபதி தலிபான் உசேன், சமீபத்தில் ரியாசி மாவட்டத்தில் நடந்த ஐஇடி குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர். அவர் இருக்கும் இடத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிப்பவர்களுக்கு ஜே & கே காவல்துறை வெகுமதியை அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் இரண்டு கனரக ஆயுதம் ஏந்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கிராமவாசிகளால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, கடந்த 2022-ல் ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “ரியாசி மாவட்டத்தில் உள்ள துக்சன் கிராம மக்களின் துணிச்சலுக்கு பாராட்டுகள். 2 AK துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு பிஸ்டல் ஆயுதங்களுடன் கிராம மக்களால் கைது செய்யப்பட்ட இரண்டு LeT பயங்கரவாதிகள்; கிராமவாசிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று DGP அறிவித்துள்ளார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Reasi district . Two #terrorists of LeT apprehended by villagers with weapons; 2AK #rifles, 7 #Grenades and a #Pistol. DGP announces #reward of Rs 2 lakhs for villagers. pic.twitter.com/iPXcmHtV5P
மேலும் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் பாஜக நிர்வாகி என்று பரவி வரும் நிலையில் அது குறித்தும் ஆய்வு செய்தோம். அதன்படி கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனான தாலிப் ஹூசைன், ஜம்மு பகுதியின் பாஜக சிறுபான்மையினர் அணியின் சமூக ஊடகப்பிரிவின் தலைவராக சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்துள்ளதையும் செய்திகள் உறுதிப்படுத்தின.
இதன் மூலம் பஹல்காம் தீவிரவாதி என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம், கடந்த 2022-ல் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தாலிப் ஹூசைன் மற்றும் ஃபைசல் அஹ்மது தார் எனும் பெயர்களுடைய லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் ரியாசி மாவட்டத்தின் துக்சான் கிராம மக்களின் உதவியோடு கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி பிடிபட்டான் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. இதுவரை தீவிரவாதி பிடிபட்டதாகக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் வெளிவரவில்லை.