யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவிலும் தேசிய அளவிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
பரவிய செய்தி
’கல்வி என்பது தனித்திறனை முன்வைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் கல்வி திட்டம் ராக்கெட் விஞ்ஞானிகளை உருவாக்கவில்லை. விளையாட்டுத்துறையில் ஏன் உசைன் போல்ட் போல் ஒருவரை உருவாக்க முடியவில்லை. ஆசிய அளவு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்களால் பதக்கம் வெல்ல முடியவதில்லை’ - நாம் தமிழர் பேச்சாளர்.
விரிவான விளக்கம்
இந்தாண்டில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், கூட்டணிகள் பற்றியும் அவற்றின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல விவாதங்கள் ஊடகங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் ‘The Fire Media’ என்னும் யூட்யூப் தளம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவர், ’கல்வி என்பது தனித்திறனை முன்வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி திட்டம் தனித்திறன் கொண்ட ஆளுமைகளை உருவாக்குவதில்லை. அது ராக்கெட் விஞ்ஞானிகளை உருவாக்கவில்லை. விளையாட்டுத்துறையில் ஏன் உசைன் போல்ட் போல் ஒருவரை தமிழ்நாட்டில் உருவாக்க முடியவில்லை? ஆசிய அளவு போட்டிகளில் கூட தமிழ்நாட்டு வீரர்களால் பதக்கம் வெல்ல முடியவதில்லை அது ஏன்?’ என்று பேசினார்.
உண்மை என்ன?
இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறையை பொறுத்தவரையில், இதுவரை 6,568 வீரர்களுக்கு ரூ.211.39 கோடிக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இது எந்த இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அதிகமானதாகும். மேலும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற ஊக்குவிக்கும் எலிட் திட்டத் தொகையும்; தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், 2025ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரிடல் மும்முறைதாண்டுதல் (Triple Jump) போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 400மீ தொடர் ஓட்டம் ஆண் பெண் கலப்பு பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இதில் பங்கேற்ற நான்கு பேரில் மூவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

அதேபோல், 2025ஆம் ஆண்டில் நடந்த 3-வது ஆசிய இளைஞர் விளையாட்டு தடகளப் போட்டி மற்றும் 4-வது தெற்காசிய (SAAF) சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 40.50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு வழங்கியுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பல பதக்கங்களை வெம்ன்றுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
முடிவு:
’தமிழ்நாட்டு கல்வித்திட்டம் ராக்கெட் விஞ்ஞானிகளை உருவாக்கவில்லை, விளையாட்டுத்துறையில் தேசிய அளவு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கம் வெல்வதில்லை’ என்று பொய்யான தகவல்களை நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் கூறி வருகிறார்.