யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் 2004க்கு பின்னர் பிறந்தவர்களில் 90 சதவீதம் நபர்களுக்கு குழந்தையின்மை (Infertility) பிரச்சினை இருப்பதாக பொய்யான தகவல் பரப்புகிறார் சாட்டை துரைமுருகன்.
பரவிய செய்தி
”தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களில் 90 சதவீதம் இளைஞர்களுக்கு குழந்தையின்மை (Infertility) பிரச்சினை இருக்கிறது” - சாட்டை துரைமுருகன்.
விரிவான விளக்கம்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், ”தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களில் 90 சதவீதம் இளைஞர்களுக்கு குழந்தையின்மை (Infertility) பிரச்சினை இருக்கிறது. இதுவொரு Report சொல்லும் உண்மையாகும். கிராமத்தில் இயற்கையான சூழலில் வளர்ந்தவர்களுக்கு வேண்டுமானல் குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு Fertility center-களுக்கு சென்றால் மட்டுமே குழந்தை பிறக்கும் நிலை வந்திருக்கிறது. சரியான உணவுப் பழக்கம் இல்லாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம்” என்று பேசினார்.
உண்மை என்ன?
உண்மையில் 2004ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கு தற்போது 21 வயது தான் ஆகும். இதில் எத்தனை நபர்களுக்கு திருமணம் ஆகியிருக்கும்? என்பது இயல்பாகவே எழும் கேள்வி. தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘குழந்தை திருமண தடைச் சட்டம் 2006’-ன் பெண்களுக்கு திருமண வயது 18ஆகவும், ஆண்களுக்கு 21ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு கீழ் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணத்தில் சேரும். இது சட்டப்படி குற்றமாகும்.

அப்படியென்றால் 2004க்கு பின்னர் பிறந்த பெரும்பாலான ஆண்களுக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. திருமணமே ஆகாத ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை எப்படி இருக்கமுடியும் என்பதை சாட்டை துரைமுருகன் தான் விளக்கவேண்டும்.
சர்வதேச அளவில் பிரபலமான ஆய்விதழான ‘Elsevier’-ல் வெளியான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படி, திருமணமான தம்பதிகள் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கு (12 மாதங்கள்) முயற்சித்தும் கரு உருவாகாமல் இருக்கும் நிலையை தான் ‘குழந்தையின்மை (Infertility)’ என்று சொல்லமுடியும். இதைத்தான் மருத்துவத்துறை ‘குழந்தையின்மை’-க்கான பொது வரையறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, 51 சதவீத இளம் தம்பதியினர் முதல் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடவே விரும்புகிறார்கள் என்பது தெரியவருகிறது. இவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்வதை பெரும் பொருளாதார பொறுப்பாக கருதி அதனை குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடும் தம்பதிகள் கனிசமாக உருவாகிவிட்ட கலாச்சார சூழலில், 21 வயதிலே இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை பிரச்சனையாக பேசுகிறார் சாட்டை துரைமுருகன்.

மேலும், போகிற போக்கில் 21 வயது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது என்று நான் சொல்லவில்லை, Report சொல்கிறது என்று கூறுகிறார் சாட்டை துரைமுருகன். நாம் தேடிப் பார்த்ததில், தமிழ்நாட்டை களமாகக் கொண்டு 21 வயது இளம் தம்பதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு குழந்தையின்மை குறித்த எவ்வித ஆய்வும் செய்யப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து பார்க்கும் போது, தமிழ்நாட்டில் இளம் தம்பதிகளில் 90 சதவீதம் பேருக்கு ‘குழந்தையின்மை’ பிரச்சினை இருப்பதாக சாட்டை துரைமுருகன் சொல்வது அப்பட்டமான பொய் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களில் 90 சதவீதம் நபர்களுக்கு குழந்தையின்மை (Infertility) பிரச்சினை இருப்பதாக பொய்யான தகவல் பரப்புகிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன்.