யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படங்கள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘Jane Win Jewelry’ என்ற தனியார் நகைக் கடையின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள்.
பரவிய செய்தி
உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வழங்கப்படுகிறது - ஃபாத்திமா, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்

விரிவான விளக்கம்
திமுக சார்பில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வழங்க தயாராகிவிட்டதாகவும், அதை வாங்கிக் கொண்டு விவசாய சின்னத்திற்கு ஓட்டு அளிக்கவேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஃபாத்திமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே போல் இதே தங்க நாயணம் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கும் மற்றும் ஜவாஹிருல்லா போட்டியிடும் நாகப்பட்டினம் தொகுதிக்கும் வழங்கப்பட தயாராக உள்ள தங்க பொருட்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.
கோவை தெற்கு (10 ரூபா பாலாஜி) மற்றும் ஜவாஹிருல்லா தொகுதிக்கு வழங்கப்பட தயாராக உள்ள தங்க பொருட்கள் இதுவாம்..
~ Sources
இதை வாங்கிட்டு திமுகவுக்கு ஓட்டு போடுறவன் சாத்தான் இல்லாம வேறென்னடா 😏 pic.twitter.com/5wopn37t7d
உண்மை என்ன?
பரவி வரும் அந்த தங்க நாணயம் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Jane Win என்ற நகைக் கடையின் இணையதளப் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அங்கு ”STRONG JW Small Pendant Coin (Rising Sun)” என்று பதிவிட்டு, பரவி வரும் தங்க நாணயம் புகைப்படம் இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அந்த நாணயம் 228.00 டாலர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தேடிய போது, Jane Win Jewelry என்ற அதே நகை கடையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், டிசம்பர் 21, 2025 அன்று இது குறித்தான புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இதையடுத்து Jane Win Jewelry குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது இது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நகைக் கடை என்பது தெரியவந்தது. இந்த கடைக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்புமில்லை.
முடிவு:
எனவே, பரவி வரும் புகைப்படங்கள், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘Jane Win Jewelry’ என்ற தனியார் நகைக் கடையின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள். இதை உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வழங்கப்படுவதாகப் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஃபாத்திமா தவறாகப் பரப்பி வருகிறார்.