யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, பணம் கொடுத்த பலர் இதுவரை கைது செய்யப்பட்டது குறித்து பல சம்பவங்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.
பரவிய செய்தி
வாக்குக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் கேடு என்று கூறி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் இதுவரை வாங்கியவரையோ, கொடுத்தவரையோ, ஒருவரையாவது இதுவரை கைது செய்திருக்கிறார்களா? அல்லது வழக்காவது தொடுத்திருக்கிறார்களா? - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் பரபரப்பாக இப்போதே மக்களை சந்தித்து பொதுக்குழு மற்றும் கூட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பில், “வாக்குக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் கேடு என்று கூறி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் இதுவரை வாங்கியவரையோ, கொடுத்தவரையோ, ஒருவரையாவது இதுவரை கைது செய்திருக்கிறார்களா? அல்லது வழக்காவது தொடுத்திருக்கிறார்களா?” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதில்லை என்று சீமான் கூறிய செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
“புதிய தலைமுறை” ஊடகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செய்தியில், “சென்னை அம்பத்தூரில் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுத்த டோக்கனுக்கு, அதிமுகவினர் பணம் விநியோகிப்பதாக புகார் எழுந்ததன்பேரில், அக்கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“ETV Bharat“ ஊடகப் பக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, “இந்து தமிழ் திசை” ஊடகப் பக்கத்திலும், “திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5.30 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்“ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, பணம் கொடுத்த பலர் இதுவரை கைது செய்யப்பட்டது குறித்து பல சம்பவங்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதில்லை என்று சீமான் கூறிய செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.