யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெவித்தனர். மேலும் அவிநாசியில் போராட்டம் நடத்தினர்.
பரவிய செய்தி
”எனக்கு எதிராக புகார் கொடுக்கப்படும் போது (விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு) மாதர் சங்கங்கள் எல்லாம் என் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டம் நடத்தும். ஆனால் ரிதன்யா என்ற பெண் வரதட்ணை கொடுமையாலும் பாலியல் கொடுமையாலும் தற்கொலை செய்து கொண்டபோது, மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே போனார்கள்? கொக்கைன் அல்லது கஞ்சா போட்டு படுத்துக்கொண்டீர்களா?”

விரிவான விளக்கம்
கடந்த ஜீலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று செய்தியாளர்கள் சிந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”எனக்கு எதிராக புகார் கொடுக்கப்படும் போது (சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு) என் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாதர் சங்கங்கள் எல்லாம் போராட்டம் நடத்துவார்கள். ஆனால் ரிதன்யா என்ற பெண் வரதட்ணை கொடுமையாலும் பாலியல் கொடுமையாலும் தற்கொலை செய்து கொண்டபோது, மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே போனார்? கொக்கைன் அல்லது கஞ்சா போட்டு படுத்துக்கொண்டீர்களா?” என்று பேசினார்.
உண்மை என்ன?
ரிதன்யாவின் மரணம் குறித்து மாதர் சங்கங்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து இணையத்தில் தேடினோம். இது குறித்து ’மாலை மலர்’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ’கடந்த ஜீலை 02ஆம் தேதியன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்’ மாநிலச் செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் ரிதன்யாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு திருப்பூர் மாவட்டத்தில் ’ஜனநாயக மாதர் சங்கம்’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அப்போது அறிவித்தனர்.

ஜீலை 02ஆம் தேதி ரிதன்யா ஜீன் மாதம் 28ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டது போலவே அடுத்த இரண்டு நாட்களில் ஜீலை 04ஆம் தேதி அன்று ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் அன்றைய தினத்தில் அப்போதுவரை கைது செய்யப்பாடமல் இருந்த அவரது மாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மாமனார், கணவர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கடந்த ஜீலை 07ஆம் தேதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 10வது ஒன்றிய மாநாடு அவிநாசியில் நடத்தப்பட்டது. அதில் ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து மாதர் சங்கங்கள் ஏதும் ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடவில்லை என்று சீமான் கூறுவது பொய்யான தகவல் என்பது உறுதியாகிறது.
முடிவு:
திருப்பூரில் வரதட்ணை மற்றும் பாலியல் கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு நீதி கேட்டு எந்த பெண்ணிய அமைப்புகளும் மாதர் சங்கங்களும் போராடவில்லை என்று சீமான் பொய்யான தகவலை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், மாதர் சங்க அமைப்புகளையும் அதன் நிர்வாகிகளையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசியுள்ளார் சீமான். இதனைக் கண்டித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.