YouTurn

'குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிகள் உள்ளதாக தரவுகள் வெளியிட்ட IMA' எனப் பரவும் தவறான செய்திகள்!

'குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிகள் உள்ளதாக தரவுகள் வெளியிட்ட IMA' எனப் பரவும் தவறான செய்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பானங்களில் (Drinks) பூச்சிக்கொல்லி சதவீதம் (%) குறித்து சமீபத்தில் IMA (இந்திய மருத்துவ சங்கம்) வெளியிட்ட தரவுகள்: தம்ஸ் அப் 15.2%; கோக் 13.4%; 7 அப் 12.5%; மிரிண்டா 10.7%; பெப்சி 10.9%; ஃபேன்டா 9.1%; ஸ்ப்ரைட் 15.3%; வோட்கா 0%; ஜின் 0%; ரம் 0%; பீர் 0%; விஸ்கி 0%; எனவே நீங்கள் என்ன குடிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள். முதல் 7 பானங்கள் மனித கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானவை. முடிவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை! உங்களுக்கு தெரிந்த அனைத்து நபர்களுக்கும் இதை அனுப்புங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் குளிர்பானங்களில் (Drinks) உள்ள பூச்சிக்கொல்லி சதவீதம் (%) குறித்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) வெளியிட்டுள்ள தரவுகள் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பலரும் ஆல்கஹால் அல்லாத குளிர்பானங்களுடன் ஒப்பிடும் போது, "மதுபானங்களை அளவாக அருந்துவது சரி தான்" என்று குறிப்பிட்டும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் பரவி வரும் அந்த புகைப்படத்தில், ஆல்கஹால் அல்லாத பானங்களான தம்ஸ் அப் (Thums Up), கோக் (Coke), 7 அப் (7 Up), மிரிண்டா (Mirinda), பெப்சி (Pepsi), ஃபேன்டா (Fanta), ஸ்ப்ரைட் (Sprite) போன்றவற்றில் முறையே 15.2%, 13.4%, 12.5%, 10.7%, 10.9%, 9.1%, 15.3% என்ற விகிதத்திலும்,  மதுபானங்களான வோட்கா (Vodka), ஜின் (Gin), ரம் (Rum), பீர் (Beer) மற்றும் விஸ்கி (Whiskey) போன்றவற்றில் முறையே பூஜ்ஜிய (0%) சதவீதத்திலும் பூச்சிக்கொல்லிகள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2015 இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.



இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) இணையதளத்தில் இது குறித்து தேடியதில்,  குளிர்பானங்களில் பூச்சிகொல்லி சதவீதங்கள் இருப்பது குறித்து எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிகள் உண்மையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த 2003 இல் Center for Science and Environment (CSE), "மென்பானங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் குறித்த பகுப்பாய்வு (Analysis of Pesticide Residues in Soft Drinks)" என்ற தலைப்பில் 36 குளிர்பானங்களின் மாதிரிகளை சோதித்து ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. CSE என்பது புது தில்லியை தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு பொதுநல ஆராய்ச்சி நிறுவனமாகும்.

CSE யின் அந்த அறிக்கையில், குறைந்தபட்சமாக ஸ்ப்ரைடில் (Sprite) 0.0055 mg/L என்ற அளவிலும், அதிகபட்சமாக மிரிண்டா லெமனில் (Mirinda Lemon Flavour) 0.0352mg/L என்ற அளவிலும் பூச்சிக்கொல்லிகளின் (ஆர்கனோகுளோரின்கள் மற்றும் ஆர்கனோபாஸ்பரஸ்) செறிவு வரம்பு (Range of Concentration of Total Pesticides) இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.



இதன் மூலம் இந்த தரவுகளில் அதிகபட்சமாக 0.0352 சதவீதத்துடன் மிரிண்டா லெமன் (Mirinda Lemon Flavour) அதிக பூச்சிக்கொல்லிகளை கொண்ட குளிர்பானங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் அதிகபட்சமாக 15.3% வரை குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் CSE அறிக்கையின் படி, வெவ்வேறு குளிர்பானங்களில் உள்ள சராசரி பூச்சிக்கொல்லி எச்சங்கள் (Average  Pesticide Residues) குறித்த விபரங்களை கீழே உள்ள அட்டவணையில் தெளிவாகக் காணலாம்.



மேலும் ஆய்வு செய்ததில், "குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்களின் பகுப்பாய்வு-2003" என்ற தலைப்பில் 2017 இல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்ட அறிக்கையையும், பீர் மற்றும் ஒயின் போன்ற மதுபானங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது குறித்து spex.com வெளியிட்டிருந்த கட்டுரையையும் காண முடிந்தது. இதே போன்று இந்தியா டுடே ஊடகமும் குளிர்பானங்களில் பூச்சிகொல்லிகள் இருப்பது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தகைய அறிக்கைகளை ஒப்பீடு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் உள்ள குளிர்பானங்களின் பூச்சிகொல்லிகளின் சதவீதமும், மேலே உள்ள அறிக்கைகளின் தரவுகளும் வெவ்வேறாக உள்ளன. மேலும் பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவாறு இந்திய மருத்துவ சங்கம் (IMA) குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லிகளின் சதவீதம் குறித்து எந்த ஆய்வறிக்கையையும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க: ஸ்மோக் பிஸ்கட் உருவாக்கப் பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜனை உட்கொண்டால் என்னவாகும்?

முடிவு:

நம் தேடலில், இந்திய மருத்துவ சங்கம் (IMA) குளிர்பானங்களில் பூச்சிகொல்லி சதவீதங்கள் இருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க