யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதை சமீபத்திய செய்தி என ‘சன் நியூஸ்’ தவறாக நியூஸ் கார்ட் வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
"துபாய் சாலைகளை மேம்படுத்த, என்னை 6 மாதங்கள் அனுப்பி வைக்கச் சொன்னார் அந்நாட்டு இளவரசர்”
புதிய தகவலை வெளியிட்ட ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.

விரிவான விளக்கம்
இந்தியாவில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் நிதின் கட்கரி. அவரது பதவிக் காலத்தில் இந்தியாவில் அமைக்கப்படும் சாலைகள் உயர்ந்த தரத்தில் இருப்பதை பெருமிதத்துடன் குறிப்பிடும் விதமாக, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன” என்று கூறியதாகவும், இவ்வாறு அவர் கூறியது புதிய தகவல் என்றும் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி 'சன் நியூஸ்' ஊடகம் நியூஸ் கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
#NewsUpdate | “துபாய் சாலைகளை மேம்படுத்த, என்னை 6 மாதங்கள் அனுப்பி வைக்கச் சொன்னார் அந்நாட்டு இளவரசர்”
புதிய தகவலை வெளியிட்ட ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி#SunNews | #NitinGadkari | #NationalHighways pic.twitter.com/RBRGir0vWB
உண்மை என்ன?
’துபாய் இளவரசர் அந்நாட்டில் சாலை அமைப்பதற்காக தன்னை அழைத்ததாக’ நிதின் கட்கரி கூறுவது குறித்து இணையத்தில் தேடியபோது, ‘Paisa LIVE’ என்ற யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த 2024 டிசம்பர் மாதம் ‘துபாயின் இளவரசரை சந்தித்த கதையை நிதின் கட்கரி பகிர்ந்துகொள்கிறார்’ என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் 2024 டிசம்பர் மாதம் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தாலும், நிதின் கட்கரி 2024ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வாறு பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், அதே வீடியோ அதே யூட்யூப் தளத்தில் 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டிருப்பதை காண்கிறோம். மீண்டும் அதே வீடியோ அதே யூட்யூப் தளத்தில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இதிலிருந்து, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ’துபாயில் சாலை அமைப்பதற்காக அந்நாட்டின் இளவரசர் தன்னை அழைத்ததாக’ நிதின் கட்கரி பேசியுள்ளார் என்பதும் பின்னர் இந்த வீடியோ வெவ்வேறு காலத்தில் மீண்டும் டிரண்ட் ஆகியிருக்கிறது என்பதும் தெரியவருகிறது.

அந்தவகையில், செப்டம்பர் 16ஆம் தேதி இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்தியாவின் மோசமான சாலை கட்டமைப்புகளை குறிக்கும் வீடியோக்களுடன் இணைத்து நிதின் கட்கரி பேசும் இந்த பழைய வீடியோ பரப்பப்பட்டது. இதனை தவறாக புரிந்துகொண்ட ’சன் நியூஸ்’ இது சமீபத்திய செய்தி என நம்பி தவறாக நியூஸ் கார்ட் வெளியிட்டுள்ளது.
முடிவு:
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதை சமீபத்திய செய்தி என ‘சன் நியூஸ்’ தவறாக நியூஸ் கார்ட் வெளியிட்டுள்ளது.