யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2025ஆம் ஆண்டு ஜூலை மாதமே ஜவ்வாதுமலையில் உள்ள பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்திருக்கிறது.
பரவிய செய்தி
"5 ஆண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டுத் தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில் ஜவ்வாது மலை சுற்றுலாத் திட்டத்தை அவசரமாக அறிவித்துள்ள ஸ்டாலின் அரசு. 7.65 ஏக்கரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் நீண்டகாலத் தாமதத்திற்கு விளக்கம் அளிக்காதது அரசின் நிர்வாகத் தோல்வியையும் கடைசிநேரத் தேர்தல் விளம்பர அரசியலையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது” - News J

விரிவான விளக்கம்
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ‘News J’ தொலைக்காட்சி News Card ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘5 ஆண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டுத் தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில் ஜவ்வாதுமலை சுற்றுலாத் திட்டத்தை அவசரமாக அறிவித்துள்ளது ஸ்டாலின் அரசு. இது கடைசிநேரத் தேர்தல் விளம்பர அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
ஜவ்வாது மலையில் சுற்றுலா திட்டம் குறித்த செய்திகளைத் தேடினோம். 2025 ஜூலை 2ஆம் தேதி ‘ABP நாடு’ வெளியிட்டுள்ள செய்தியைக் காணமுடிந்தது.

அதில், 2025 ஜூலை மாதம் ஜவ்வாதுமலையில் நடந்த 25வது கோடை விழாவை தொடங்கி வைத்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ’ஜவ்வாதுமலையில் உள்ள பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைப்பதற்காக 2 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக’ தெரிவித்தார். மேலும், ஜவ்வாதுமலை ஆதிசிவன் கோவில் புனரமைக்கும் பணிக்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே செய்தியை ‘தினமலர்’ செய்தித்தளத்திலும் காணமுடிகிறது.
இதிலிருந்து, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதமே ஜவ்வாதுமலையில் சுற்றுலா தலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்ததை அறியமுடிகிறது.
முடிவு:
2025ஆம் ஆண்டு ஜூலை மாதமே தொடங்கப்பட்ட சுற்றுலா திட்டத்தை, தேர்தல் விளம்பரத்திற்காக திமுக அரசு தற்போதுதான் அறிவித்துள்ளதாக ’News J’ செய்தி ஊடகம் தவறான தகவலை பரப்பி வருகிறது.