யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்” என்று அமைச்சர் சேகர் பாபு கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு, ஒரு தம்பதி அசைவ உணவை எடுத்து வந்து சாப்பிட்ட சம்பவம் தமிழகத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்றும், சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறியதாக சன் நியூஸின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டில் 13 ஜூன் 2025 என்று தேதி இருந்ததைப் பார்க்கமுடிந்தது. இதை வைத்து சன் நியூஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில் அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்கள் பதிவிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

இதையடுத்து அமைச்சர் சேகர்பாபுவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களிலும் தேடிப் பார்த்தோம். எதிலும் இது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதைப் பார்க்க முடிந்தது.

அதே போல் keywords மூலம் தேடிப் பார்த்த போதும், யூடியூப் மற்றும் எந்த ஊடகத்தின் இணையதளப் பக்கத்தில், இது தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.

இதை மேலும் உறுதி செய்ய சன் நியூஸ் ஊடகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இப்படியான எந்த செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தனர்.
முடிவு :
எனவே, “பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்” என்று அமைச்சர் சேகர் பாபு கூறியதாகப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெரியவந்தது.
