யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவி வரும் செய்தி தற்போது வெளியிடப்பட்டது அல்ல. கடந்த 2018 டிசம்பர் 25 அன்று தந்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட பழைய செய்தி.
பரவிய செய்தி
டாஸ்மாக் கடைய மூட சொன்னா சத்துணவு கூடத்தை மூடுறானுங்க, பைத்தியக்காரனுங்க

விரிவான விளக்கம்
25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்கள் மூடப்பட உள்ளதாக செய்தி ஊடகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் மதுபான கடைகளை மூடக் கூறினால், சத்துணவு கூடத்தை மூடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை என்ன ?
பரவி வரும் செய்தி குறித்து keywords மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது THANTHI TV ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ”Breaking : 25 குழந்தைகளுக்கும் குறைவாகப் பயன்பெறும் சத்துணவு மையங்களை மூட உத்தரவு” என்ற தலைப்பில் டிசம்பர் 25, 2018 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில் மூடப்பட உள்ள மையங்கள் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு வேறு மையங்களிலிருந்து உணவு வழங்க ஏற்பாடு என்றும், அரசின் செயல்பாட்டைக் கண்டித்து டிசம்பர் 27, 2018 அன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தி டிவியின் செய்தியில் வருவதைத் தான் Screenshot எடுத்து, தற்போது நடந்தது போல் பரப்புகின்றனர்.
இதையடுத்து 2018ல் சத்துணவு மையங்கள் மூடப்பட்டதா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது டிசம்பர் 26, 2018 அன்று ”சத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்டவட்டம்” என்ற தலைப்பில் asiriyar. net ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் தமிழகத்தில், 25 குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாகப் பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் 2022லும் சத்துணவு மையங்களை மூடவுள்ளதாகச் செய்திகள் பரவி உள்ளது. இது குறித்து, டிசம்பர் 6, 2022 அன்று ETV Bharat ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்க முடிந்தது. அதில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது என்றும், சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில், 25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவி வரும் செய்தி தற்போது வெளியிடப்பட்டது அல்ல. கடந்த 2018 டிசம்பர் 25 அன்று தந்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட பழைய செய்தி. மேலும் அப்போதே சமூக நலத்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.