யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த சந்திப்புகள் ராஜதந்திர (Diplomatic) ரீதியான சந்திப்பு அல்ல. மேலும் அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கவில்லை.
பரவிய செய்தி
மோடிஜி - எலான் மஸ்க் சந்திக்கிறப்ப குழந்தைகளை கூட்டி வந்ததுக்கு Diplomatic பாடம் எடுக்குறவன்லாம் யாருன்னு நினைக்கிற... மன்மோகன் சிங்கை பொம்மையாட்டம் உக்கார வச்சுட்டு வெளிநாட்டு தலைவர்களோட சூன்யக்காரியும் பப்புக்குட்டியும் பேச்சுவார்த்தை நடத்தினப்போ ஃபயர் விட்ட பயலுக தான்

விரிவான விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க்-ஐ சந்தித்து விண்வெளி, தொழில்நுட்பம் ஆகியவை பற்றி உரையாடினார் மோடி. இந்த நிகழ்வின் போது எலான் மஸ்க்-ன் குழந்தைகளும் உடன் இருந்தனர். ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது குழந்தைகளை அனுமதித்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
இவ்வாறு ராஜதந்திர ரீதியான (Diplomatic) சந்திப்புகளின் போது குழந்தைகளை அனுமதித்தது பற்றி மோடி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், மன்மோகன் சிங் பிற நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘இந்த சந்திப்புகளின் போது ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற ’நேரு குடும்பத்தினர்’ உடன் கலந்துகொண்டதாக’ சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படங்களை Reverse Image Searching முறையில் இணையத்தில் தேடியதில், அவை பற்றிய செய்திக் கட்டுரைகளைக் காணமுடிந்தது.

முதல் படம், 2017 நவம்பர் மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தூதுக்குழு சார்பாக அப்போதைய இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடன் சந்தித்த போது எடுக்கப்பட்டது.
இரண்டாம் படம், 2019 அக்டோபர் மாதம் வங்கதேசத்தின் 50ஆவது விடுதலை தினத்தையொட்டி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்றுச் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மூன்றாவது படம், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாள பிரதமர் K.P. சர்மா ஒலி-யை முன்னால் மன்கோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ராகும் காந்தி ஆகியோர் சந்தித்து இரு நாட்டின் பரஸ்பர நலன்கள் பற்றி விவாதித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

கடைசிப் படம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ராகுல் காந்தி மன்மோகன் சிங் ஆகியோர் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா-ஐ சந்தித்து இரு நாட்டின் பரஸ்பர நலன்கள் பற்றி விவாதித்தனர்.
மேற்கூறிய இந்த சந்திப்புகளில் எதுவும் இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர (Diplomatic) ரீதியான சந்திப்பு அல்ல. இவை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட சந்திப்புகள். இந்த சந்திப்புகள் நடந்தபோது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கவில்லை.
முடிவு:
காங்கிரஸ் கட்சி சார்பாகப் பிற நாட்டுத் தலைவர்களுடன் நடந்த சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இதனைத் திரித்து மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த சந்திப்புகள் நடந்ததாகவும், ’நேரு’ குடும்பத்தினரால் மன்மோகன் சிங் கைப்பாவையாக நடத்தப்பட்டார் என்றும் தவறாகப் பரப்புகிறார்கள்.