யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சேலம் மாநாட்டிற்கு முன்னதாகவே 'திராவிட நாடு திராவிடர்களுக்கே' என்ற முழக்கமும், திராவிடர் கழகம் என்ற பெயரும் நீதிக்கட்சி முன்வைத்து வந்துள்ளது.
பரவிய செய்தி
'தமிழர் கழகம்' என பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதில் ஐயா பெரியார் தலைமையேற்க முடியாது என்ற காரணத்தால் தான், 'திராவிடர் கழகம்' என பெயர் வைக்கப்பட்டது - சீமான்
விரிவான விளக்கம்
’தமிழர் கழகம்’ எனப் பெயர் இருந்தால் தந்தை பெரியார் தலைமை ஏற்கமுடியாது என்பதால்தான் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் வைக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ எனக் கலைஞர் கருணாநிதி திருத்தியதாக அதே செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
இதே கருத்தை வேறொரு நிகழ்வில் சீமான் பேசிய வீடியோ நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ’தமிழ்த் தேசிய பெருந்தகை 'அருகோ'விடம் கேளுங்கள்’ எனச் சீமான் கூறுகிறார்.
முனைவர் அருகோ என்பவர் சீமானுக்கு முன்னர் இதே கருத்தைப் பேசியுள்ளார். அவர் கூறியது; “1944-ல் பெரியார் தலைமையில் சேலத்தில் மாநாடு நடக்கிறது. நீதிக்கட்சி ’தமிழர் கழகமாக’ மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் அந்த மாநாடு கூட்டப்படுகிறது. அந்த மாநாட்டின் காலை நிகழ்ச்சியில் கட்சியின் பெயர் தமிழர் கழகமாக மாற்றப்படுகிறது. ’தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் அங்கீகரிக்கப்படுகிறது”. சீமானைப் போலவே இவரும் இதே கருத்தை வெவ்வேறு நேர்காணல்களில் பேசியுள்ளார்.
உண்மை என்ன?
1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்), 1920ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. 1937ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இழப்பதற்கு முன்பே அக்கட்சியின் நிலை மிக மோசமாகியது. இதே காலகட்டத்தில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் (1925) என்ற பெயரில் சமூகச் சீர்திருத்த இயக்கத்தை நடத்தி வந்தார்.
எனவே, நீதிக்கட்சியினர் பெரியாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதனை அவரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து 1938ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிக்கட்சியின் 14-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. ஆனால், இதில் பெரியார் கலந்துகொள்ளவில்லை. அப்போது அவர் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்து அவர் எழுதி அனுப்பிய தலைமை உரையை ஏ.டி.பன்னீர்செல்வம் மேடையில் வாசித்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் 15-வது மாநாடு திருவாரூரில் நடைபெற்றது. பெரியார் தலைமையில் நடந்த முதல் நீதிக்கட்சி மாநாடு இதுதான். இந்த மாநாடுதான் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற கொள்கையைச் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் ஏற்றுக்கொண்ட மாநாடு எனத் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘நீதிக்கட்சி வரலாறு தொகுதி-1’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (பக்.508).

‘திராவிடர் கழகம் எனும் மாற்றம் வெறும் பெயர் மாற்றம் அல்ல!’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று இந்து தமிழ் திசை தளத்தில் வெளியாகியுள்ளது. 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தை இணைத்து ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னரே 1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பகோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு நடத்தப்பட்டதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அறிஞர் அண்ணா தலைமையில் சென்னையில் நடந்த ஒரு மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதை ’திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாகவும் பெரியாரின் விருப்பத்தின்படி, அப்பெயர் மாற்றத்தை அண்ணா சேலத்தில் நிறைவேற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திராவிட இயக்கத்தின் ஆங்கிலக் குரல்!’ என்ற தலைப்பில் நீதிக்கட்சியைச் சேர்ந்த பி.பாலசுப்ரமணியம் குறித்து செ.அருள்செல்வன் என்பவர் 2017, மே மாதம் இந்து தமிழ் திசையில் கட்டுரை எழுதியுள்ளார். திராவிடர் கழகம் என்ற பெயருக்குப் பதிலாகத் தமிழர் கழகம் என்ற பெயரே பொருத்தமானதாக இருக்குமென பி.பாலசுப்ரமணியம் சேலம் மாநாட்டில் குரல் எழுப்பியதாக அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
அருள்செல்வன் எழுதிய கட்டுரை 'வரலாற்றுத் திரிபு' என மார்க்ஸிய பெரியாரிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை பல்வேறு ஆதாரங்களுடன் அதே இந்து தமிழ் திசையில் கட்டுரை எழுதியுள்ளார். “13.2.1944-ல், சென்னையில் சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதை - சென்னை மாகாண திராவிடர் கட்சி என்று மாற்றுமாறு, சேலத்தில் நடைபெறப்போகும் மாகாண மாநாட்டுக்கு இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வே.ஆனைமுத்து தொகுத்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு 26.11.1943 அன்று கூடி நிறைவேற்றிய தீர்மானங்களில் ஜஸ்டிஸ் கட்சிக்கு (நீதிக்கட்சி) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரை ’திராவிடர் கழகம்’ என்றும் ஆங்கிலத்தில் ‘சவுத் இந்தியன் திராவிடியன் பெடரேஷன்’ என்றும் மாற்ற வேண்டும் என்பதும் அடங்குமென குடிஅரசு இதழில் 4.12.1943 அன்று வந்த செய்தியை எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் சேலம் மாநாட்டில் இத்தகைய பெயர் மாற்றம் செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீதிக்கட்சிக் கிளைகள் சில ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரில் இயங்கிவந்ததையும் எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார்.
கிடைத்த ஆதாரங்கள் அனைத்திலும் சேலம் மாநாட்டிற்கு முன்னதாகவே 'திராவிட நாடு திராவிடர்களுக்கே' என்ற முழக்கமும், திராவிடர் கழகம் என்ற பெயரும் நீதிக்கட்சி முன்வைத்து வந்ததை அறியமுடிகிறது. மேலும் சேலம் மாநாட்டில் தமிழர் கழகம் எனப் பெயர் வைத்ததாக எந்த வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.
ஆனால் அருகோ மற்றும் சீமான் ஆகியோர், சேலம் மாநாட்டின் காலை நிகழ்ச்சியில் 'தமிழர் கழகம்' எனப் பெயர் வைத்ததாகவும் மாலை 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றப்பட்டதாகவும் ஒரு பொய்யினை தொடர்ந்து பேசி வருகின்றனர்.
மேலும் சீமான் செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடு’ என்பதைக் கலைஞர் மாற்றியதாகப் பேசியுள்ளார். இதுவும் தவறான தகவலாகும். இதுகுறித்து ஆதாரங்களுடன் யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: "திராவிடர் நல் திருநாடு"; சர்ச்சையும் உண்மையும்!
முடிவு:
சேலம் மாநாட்டில் (1944) நீதிக்கட்சியின் பெயர் தமிழர் கழகம் என மாற்றப்பட்டு பின்னர் அதே மாநாட்டில் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டதாகச் சீமான் சொன்ன தகவல் தவறானது. சேலம் மாநாட்டில் 'தமிழர் கழகம்' என நீதிக்கட்சிக்கு பெயர் வைக்கவில்லை. சேலம் மாநாட்டிற்கு முன்னதாகவே 'திராவிடர் கழகம்', 'திராவிட நாடு திராவிடருக்கே' என்கிற முழக்கம் நீதிக்கட்சியில் இருந்துள்ளது.
ஆதாரங்கள்
நீதிக்கட்சி வரலாறு தொகுதி-1 - க.திருநாவுக்கரசு
திராவிடர் கழகம் எனும் மாற்றம் வெறும் பெயர் மாற்றம் அல்ல!வரலாற்றை வசதிக்கேற்ப வளைக்கக் கூடாது!- எதிர் வினை