
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X link
விரிவான விளக்கம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கையெழுத்திட மாட்டோம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி#420திமுக pic.twitter.com/KuNEcGcLpq
— மின்னல்⚡முரளி™ (@MinnalMuraliii) November 7, 2023
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றினை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், “நீட் தேர்வுக்கு எதிராக திமுக மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கையெழுத்திட மாட்டோம்” என்றுள்ளது.
அடப்பாவி https://t.co/LZ3xAIoRHr
— Srividhya (@Srividhya_Hari) November 7, 2023
இதேபோல் ‘நீட் விலக்கு நம் இலக்கு - அதிமுக பங்கேற்காது’ என எடப்பாடி பழனிசாமி பேசியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டும் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
எடப்பாடி பழனிசாமி குறித்துப் பரவக் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ’06.11.2023’ ’12.04PM’ என்றுள்ளது. பொதுவாக புதிய தலைமுறை 12.00, 12.30 என அரை மணி நேரக் கணக்கில் தான் நியூஸ் கார்டில் நேரம் குறிப்பிடுவர். ஆனால், பரவும் கார்டில் 12.04 என உள்ளது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் புதிய தலைமுறை அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில் அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்கள் பதிவிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
நீட்டிற்கு எதிராக திமுக-வினர் நடத்தும் கையெழுத்து இயக்கம் குறித்து எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் பேசுகையில், ”நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 50 லட்சம் பேரிடம் பெறும் கையெழுத்தை வாங்கி என்ன செய்யப் போகிறாா்கள்? அதை யாரிடம் கொடுப்பார்கள்? இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? திமுகவின் போலி நாடகத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். மத்திய அரசை எதிர்க்க முடியாத அரசாக திமுக உள்ளது.

ஜல்லிக்கட்டு என்பது மாநில பிரச்னை, நீட் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரண்டும் வேறு” எனக் கூறியுள்ளார். அவர் பேசியது தொடர்பாகத் தினமணியில் வெளியாகியுள்ள செய்தியில் ’அதிமுக நிர்வாகிகள் யாரும் கையெழுத்திட மாட்டோம்’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், பரவக் கூடிய நியூஸ் கார்டினை அவரது டிவிட்டர் பக்கத்தில் ’பொய் செய்தி’ எனப் பதிவிட்டுள்ளார்.
கையெழுத்து வாங்க முடியவில்லை,பள்ளி மாணவர்களிடம் கட்டாயமாக மிரட்டி கையெழுத்து வாங்கப்படுகிறது. ஏன்டா இந்த பிழைப்புக்கு Fake News வேற..#Udhayanidhi கையெழுத்து வாங்கினால் நீட் விலக்கு வரும் இல்லை என்றால் #ஸ்டாலின் ராஜினாமா செய்வார் சொல்லு பார்ப்போம். #420திமுக @mkstalin pic.twitter.com/TQ3Exkm5T0
— Kovai Sathyan (@KovaiSathyan) November 7, 2023
இந்த கையெழுத்து இயக்கம் தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்றைய தினம் (நவ. 07) செய்தியாளர் ஒருவர், ’நீட் விலக்கிற்கு எடப்பாடி பழனிசாமியிடம் கையெழுத்து பெறுவீர்களா’ என்ற கேள்வியை எழுப்பினார். ‘எல்லோரிடமும் நேரம் கேட்டுள்ளோம். அனைவரிடமும் பெறப்போகிறோம்’ எனப் பதில் அளித்தார்.
ஜூனியர் விகடனும் அவர்களது அதிகாரப்பூர்வ பக்கங்களில் அப்படி எந்த நியூஸ் கார்டும் பதிவிடவில்லை. எடப்பாடியும் அப்படி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவை இரண்டும் போலியாக எடிட் செய்யப்பட்டவை.
மேலும் படிக்க : மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் தவறானச் செய்தி !
இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நீட் தேர்வு குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : நீட்-க்கு எதிராக 100% எம்பிபிஎஸ் சீட்களும் தெலங்கானாவிற்கே என சட்டம் இயற்றியதாகப் பரவும் தவறான செய்தி !
முடிவு :
நம் தேடலில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கையெழுத்திட மாட்டோம், அதில் பங்கேற்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டுகள் உண்மையானது அல்ல. புதிய தலைமுறை மற்றும் ஜூனியர் விகடன் அப்படி எந்த நியூஸ் கார்டையும் பதிவிடவில்லை. அவை போலியாக எடிட் செய்து பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.