யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வேலு நாச்சியார் குறித்த பாடம், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் பல ஆண்டுகளாகவே கற்பிக்கப்படுகிறது. அதே போல் 2023ஆம் ஆண்டு கடலோரக் காவல் படை கப்பலுக்கு ராணி வேலு நாச்சியார் பெயர் வைக்க வேண்டும் என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
தமிழக வெற்றிக் கழகம் வேலு நாச்சியரை கொள்கை தலைவராக அறிமுகப்படுத்தும் வரை, அவரைப் பற்றி யாரும் பேசவில்லை - நாஞ்சில் சம்பத், தவெக

விரிவான விளக்கம்
சமீபத்தில் விஜய் அம்பேத்காரை கொண்டாட ஆரம்பித்ததால் தான் உலகத்திற்கே அம்பேத்கார் தெரிய வந்தார் என்று தவெக வழக்கறிஞர் சத்யகுமார் கூறியது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து தற்போது, தமிழக வெற்றிக் கழகம் வேலு நாச்சியரை கொள்கை தலைவராக அறிமுகப்படுத்தும் வரை, அவரைப் பற்றி யாரும் பேசவில்லை என அக்கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் Behindwoods ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் வேலுநாச்சியார் குறித்து எங்கும் பேசப்படவில்லை என்பதை தேடினோம். அப்போது Educator Muthukumar என்ற யூடியூப் பக்கத்தில், பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் வீடியோவாக பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் “6th New Tamil Book | இயல் - 7 | விரிவானம் | வேலுநாச்சியார்” டிசம்பர் 03, 2022 அன்று ஒரு வீடியோ பதிவாகியிருந்தது. அதை பார்த்த போது வேலு நாச்சியார் குறித்த பாடம், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் பல ஆண்டுகளாகவே கற்பிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, இந்து தமிழ் ஊடகத்தில் ”கடலோர காவல் படை கப்பலுக்கு வேலு நாச்சியார் பெயர் சூட்டுக: மக்களவையில் தமிழச்சி எம்.பி வலியுறுத்தல்” என்ற தலைப்பில் பிப்ரவரி 13, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், கடலோரக் காவல் படை கப்பலுக்கு ராணி வேலு நாச்சியார் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ராணி வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றும் வகையில் அவரது உருவப்படம் பரவலாக பயணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவரது நிஜ வாழ்க்கைப் போராட்டம் 62 நாடகக் கலைஞர்களின் பங்கேற்போடு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, தமிழக வெற்றிக் கழகம் வேலு நாச்சியரை கொள்கை தலைவராக அறிமுகப்படுத்தும் வரை, அவரைப் பற்றி யாரும் பேசவில்லை என்று தவெகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத் பரப்புவது தவறானத் தகவலாகும். வேலு நாச்சியார் குறித்த பாடம், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் பல ஆண்டுகளாகவே கற்பிக்கப்படுகிறது.