யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மேற்கு வங்கம் மாநிலம், நாடியா மாவட்டத்தில் 1982ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள Nabadwip Gauranga என்ற இப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பரவிய செய்தி
இதில் பயணித்தால் போய் சேர வேண்டிய இடம் எது என்பதை பாலம் தான் முடிவு செய்யும். இதுதான் மோடியின் " SPACE TECHNOLOGY ", கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் மொத்தமா நக்கிக்கிட்டு போயிடுச்சு

விரிவான விளக்கம்
அக்டோபர், 2022ம் ஆண்டு குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டபுல் இன்ஜின் சர்கார் எனச் சொல்லும் பாஜகவின் மாநிலத்தில் ஏற்பட்ட இவ்விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மோடியின் ஆட்சியில் கட்டப்பட்டு இடிந்து விழக்கூடிய நிலையில் மோசமாக உள்ள பாலம் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் அந்த வீடியோவை பதிவிட்டவர் இது பீகாரில் உள்ள பாலம் என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமெஜ் சர்ச் மூலம் தேடினோம். இதே வீடியோவை கடந்த அக்டோபர், 3-ம் தேதி ‘JUNGLEMAHAL NEWS 24x7’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பெங்காலியில் இருந்த தலைப்பை மொழிபெயர்த்ததில், அப்பாலத்தின் பெயர் ‘Nabadwip Gaurang’ என அறிய முடிந்தது.
தற்போது பரவக் கூடிய இதே வீடியோவை கொண்டு தேடியதில், வங்காள மொழியில் இயங்கக்கூடிய ‘Times Now’ ஊடகத்திலும் செய்தி வெளியாகியுள்ளதை அறிய முடிகிறது. இந்த பாலம் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பாலம் சேதமானது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவிய போது மாவட்ட நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வினை தொடர்ந்து மேற்கு வங்க மாநில பொதுப்பணித்துறை செயலாளர் Antara Acharya செய்தியாளர்களிடம் பேசும் போது, ’1982-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இப்பாலம் தற்போது சேதமாகியுள்ளது. பொறியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
‘Structurae’ என்ற தளத்தில் இந்த பாலத்திற்கான பணி 1972-ம் ஆண்டு (காங்கிரஸ்) தொடங்கப்பட்டு 1983-ல் முடிக்கப்பட்டதாக (சி.பி.ஐ.எம்.) குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு முறைகூட ஆட்சியிலிருந்தது கிடையாது. இவற்றிலிருந்து இது பீகாரில் உள்ள பாலம் என்பதும் பாஜகவால் கட்டப்பட்டது என்பதும் தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.

அதே நேரத்தில் பீகார் மாநிலத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பல பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
இந்த பாலம் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள இந்த பாலம் சேதமடைந்ததையடுத்து பராமரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது பாஜக-வால் கட்டப்பட்டதும் கிடையாது. இம்மாநிலத்தில் பாஜக இதுவரை ஆட்சி செய்ததும் கிடையாது.