யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது, கடந்த 2023 அக்டோபர் மாதம் காஸாவின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசப்பட்டது.
பரவிய செய்தி
பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழகத்தில் பொது மேடையில், இந்தியாவை "பயங்கரவாத நாடு" என சொல்லும், இந்த இஸ்லாமிய தீவிரவாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். @PMOIndia @HMOIndia @NIA_India @annamalai_k @MIB_India @Murugan_MoS @HRajaBJP. நம்ம சிறுபான்மையினர் அதனால் நம்ம என்ன பேசினாலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காது என்ற திமிரில் எப்படி பேசுறானுங்கன்னு பாருங்க.

விரிவான விளக்கம்
இஸ்லாமிய தலைவர் ஒருவர் பொது மேடையில், ‘உலகின் முதல் தீவிரவாத அரசு இஸ்ரேல். இரண்டாவது நாம் வாழும் இந்த நாடு. இதனை நாம் இந்தியா என்று அழைக்க முடியாது. ஏனெனில், இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நின்றிருக்கிறது’ என்று பேசும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’”பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழகத்தில் பொது மேடையில், இந்தியாவை பயங்கரவாத நாடு" என்று இஸ்லாமியர்கள் சொல்வதாகவும், இதற்கு திமுகவும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதாகவும்’ இந்துத்துவ ஆதரவாளர் ஒருவர் பரப்பிவருகிறார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழகத்தில் பொது மேடையில்,
இந்தியாவை "பயங்கரவாத நாடு" என சொல்லும், இந்த இஸ்லாமிய தீவிரவாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். @PMOIndia @HMOIndia @NIA_India @annamalai_k @MIB_India @Murugan_MoS @HRajaBJP
நம்ம சிறுபான்மையினர் அதனால் நம்ம என்ன பேசினாலும் திமுக… pic.twitter.com/WkPLxHo5d2
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Headline Karnataka’ என்ற செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 2023 அக்டோபர் 29ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதன்படி, ‘கோவை உக்கடம் பகுதியில் அல் ஜமாத் மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த போராட்டத்தில், இலியாஸ் ரியாசி என்ற மௌலாவி பேசும் போது ’உலகின் முதல் தீவிரவாத அரசு இஸ்ரேல். இரண்டாவது நாம் வாழும் இந்த நாடு’ என்று பேசியுள்ளதை அறியமுடிகிறது.

இதே செய்தியை 2023 அக்டோபர் 25 அன்று ’OP India’ செய்தித்தளமும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த போராட்ட மேடையில், ’கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா பல்வேறு பிரதமர்களை கண்டுள்ளது. ஆனால் மோடி மட்டும் தான் இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் செய்திருக்கிறார்’ என்றும் ‘இந்திய அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கக் கூடாது, இந்தியாவில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக’ பேசியிருப்பதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலை தொடர்ந்து தற்போதைய காஸா மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, இந்த பேச்சு கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் காஸா மீதான இன அழிப்பு போரை தீவிரப்படுத்திய போது, அதனை கண்டித்து ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு போக்கும் கண்டிக்கப்பட்டுள்ளது.
முடிவு:
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸாவின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசப்பட்டதை, தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசப்பட்டதாக திரித்துப் பரப்பப்படுகிறது.