YouTurn

எம்பி தயாநிதி மாறன் MPLADS நிதியை பயன்படுத்தவில்லை எனத் தவறான செய்தி.‌. தவறை ஒப்புக் கொண்ட இந்து நாளிதழ் !

எம்பி தயாநிதி மாறன் MPLADS நிதியை பயன்படுத்தவில்லை எனத் தவறான செய்தி.‌. தவறை ஒப்புக் கொண்ட இந்து நாளிதழ் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இந்தியாவின் மிகவும் பயனற்ற எம்.பி தயாநிதி_மாறன்.. 1. பூஜ்ஜிய தனிப்பட்ட உறுப்பினர் மசோதாக்கள்; 2. MP நிதியை பயன்படுத்தவில்லை; 3. குறைந்த கேள்விகளை எழுப்பிய எம்.பி.க்களில் ஒருவர்; தி.மு.க.வினர் கூட வெட்கப்பட வேண்டும், இது போன்ற ஒரு சோம்பேறி திறமையற்ற, மேல்தட்டு நபருக்கு வாக்களிப்பதற்கு..



X Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சமூக ஊடகங்களிலும் அரசியல் தலைவர்கள் குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், தனது தொகுதிக்கான MPLADS நிதியை பயன்படுத்தவில்லை பாருங்கள் என்று கூறி, தி இந்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் புகைப்படம் ஒன்றை வைரலாகப் பரப்பி வருவதைக் காண முடிகிறது. 

மேலும் 'தி இந்து' வெளியிட்டுள்ள அந்த செய்தியில், "சமீபத்திய ஒன்றிய அரசின் தரவுகளின்படி, 2019 முதல் 2024 வரை MPLADS நிதியின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (MPs) ஒதுக்கப்பட்ட நிதியில், கிட்டத்தட்ட 75% இதுவரை பயன்படுத்தப்படவில்லை. தரவுகளின்படி, மத்திய சென்னைத் தொகுதிகளின் கீழ் எந்த செலவினமும் பட்டியலிடப்படவில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மை தன்மையை அறிய, முதலில் MPLADS (Members of Parliament Local Area Development Scheme) எனப்படும் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்" என்றால் என்ன என்பது குறித்து தெளிவாகப் பார்ப்போம். 

MPLADS நிதி திட்டம்:

1993-94 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளான குடிதண்ணீர், கல்வி, பொது சுகாதாரம், சாலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும் தனது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்ய முடியும். ராஜ்யசபா உறுப்பினர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் இதற்கான பணிகளைப் பரிந்துரைக்கலாம்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களும், இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கு விருப்பமான பணியை செயல்படுத்த, நாட்டின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.



எம்பி தயாநிதி மாறன் தனது தொகுதிக்கான MPLADS நிதியை பயன்படுத்தவில்லையா?

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு 2019-20 முதல் 2023-24 வரை MPLADS நிதியிலிருந்து எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ‘Sansad’ இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம்.

‘Sansad’ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் படி, தயாநிதி மாறனுக்கு 2019-20 முதல் 2023-24 வரை MPLADS நிதியிலிருந்து ரூ.7 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தது. மேலும் இக்காலகட்டத்தில் தயாநிதி மாறன் ரூ.8.52 கோடியைத் தொகுதி மேம்பாட்டிற்காகச் செலவு செய்துள்ள தகவலும் அதே தளத்தில் இருந்தது.



MPLADS இணையதளத்திலும் மேற்கண்ட இதே விவரங்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். அதிலும், தயாநிதி மாறனுக்கு 2019-20 முதல் 2023-24 வரை MPLADS நிதியிலிருந்து ரூ.7 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ரூ.8.52 கோடியைத் தொகுதி மேம்பாட்டிற்காக அவர் இந்த காலக்கட்டத்தில் செலவு செய்துள்ளதாகவும் இருந்தது.

ஆனால், MPLADS தளத்தின் மற்றொரு பகுதியில் தயாநிதி மாறனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.9.8 கோடி என்றும், அதில் எந்த பணமும் செலவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று MPLADS மூலம் "17 வது லோக்சபாவின் செலவு விவரங்கள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தரவுகளில், அரசின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள நிதி ரூ.7 கோடி என்றும், Sanctioned ஆன தொகை ரூ.16.77 கோடி என்றும், இதில் ரூ.8.5292 கோடியைத் தொகுதி மேம்பாட்டிற்காக அவர் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.



மேலும் இதே இணையதளத்தின் மற்றொரு பக்கத்தில், 9.8 கோடி நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை பூஜ்ஜியம் என்றும் இருந்தது.



இதன் மூலம் ஒரே இணையதளத்தில், வெவ்வேறு தரவுகள் காணப்படுவதைத் தெளிவாகக் காண முடிகிறது.

RTI மூலம் தகவல் பெற்றதாக The Hinduவில் குறிப்பிடப்பட்டுள்ள தயானந்த கிருஷ்ணனிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். தனக்கு கிடைத்த RTI பதிலில் MPLADS தளத்தில் தரவுகள் இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது என்றார். மேலும், அதில் எந்த தொகை விவரமும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். MPLADS தளத்திலிருந்த தகவல்தான் இந்து கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் முன்னரே கூறியதை போல அது முன்னுக்குப் பின் முரணாக உள்ள தகவல். ஆனால், அந்த தரவுகளை RTI பதிலில் கிடைத்ததாக The Hindu கூறுவது சரியல்ல. இந்து இத்தரவுகளில் உள்ள சிக்கலை கவனித்திருக்க வேண்டும். ஆனால், எப்படியோ தவறவிட்டுவிட்டது.

மேலும் இது குறித்து The Hindu ஏப்ரல் 13 அன்று தனது பக்கத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையில், "மேற்கோள் காட்டப்பட்ட RTI அறிக்கையில் உள்ள தரவுகள் தவறாகக் கண்டறியப்பட்டதால் இந்தக் கட்டுரை வெளியீட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்டது" என்று குறிப்பிட்டு தற்போது தனது பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டது என்பதையும் அறிய முடிந்தது. ஆனால் இந்த செய்தியை உண்மை என்று கருதி பலரும் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



மேலும் ஒன்றிய அரசின் இணையதளங்கள் தகவல்கள் வழங்குவதில் ஏன் இவ்வளவு நம்பகத்தன்மையற்றதாகவும், தரவைப் புதுப்பிப்பதில் சுணக்கத்துடனும் இருக்கின்றன என்ற கேள்வியும் நமக்கு ஆழமாக எழுகின்றது.

முடிவு:

நம் தேடலில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், தனது தொகுதிக்கான MP நிதியை பயன்படுத்தவில்லை என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தரவுகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க