யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. இந்த வீடியோவில் இருக்கும் இராணுவ வீரர்களின் சீருடையில் ’BNRA’-வின் குறியீட்டை தெளிவாக காணமுடிகிறது.
பரவிய செய்தி
இந்திய இராணுவம் மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிதங்களும், ரொக்க பணமும்..
அடேங்கப்பா எவ்வளவு பணம், துப்பாக்ககள் எப்ப... திராவிடம் இதற்க்கும் முட்டு கொடுப்பாங்க.

விரிவான விளக்கம்
மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து, இந்திய ராணுவம் கைப்பற்றிய ஆயுதங்களும், ரொக்க பணமும் என்று கூறி ஒரு நிமிட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் பயங்கரமான ஆயுதங்களும், நிறைய பணக்கட்டுகளும் இடம்பெற்றிருந்தது.
இந்திய இராணுவம் மணிப்பூர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிதங்களும், ரொக்க பணமும்..
அடேங்கப்பா எவ்வளவு பணம், துப்பாக்ககள் 🙄எப்ப... திராவிடம் இதற்க்கும் முட்டு கொடுப்பாங்க. pic.twitter.com/vcun1zApPU
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியை உன்னிப்பாக ஆராய்ந்ததில், அதில் காணப்பட்ட பணம் இந்திய ரூபாய் அல்ல என்பது தெரியவந்தது. மேலும், காட்சிகளில் காணப்படுபவர்கள் அணிந்திருந்த இராணுவச் சீருடையில் BNRA என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

BNRA என்பது ‘Burma National Revolutionary Army’ ஆகும். இது மியான்மாரில் உள்ள ராணுவ அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் ஒரு கிளர்ச்சி பழங்குடி ராணுவமாகும். இது குறித்துத் தேடிய போது, Burma National Revolutionary Army - BNRA என்ற யூடியூப் பக்கத்தைப் பார்க்க முடிந்தது. அந்த பக்கத்தின் Profile-ல் உள்ள புகைப்படமும்,காணொளி இடம்பெற்று இருந்த ராணுவ சீருடையில் உள்ள logoவும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணமுடிந்தது. இதையடுத்து இது ‘Burma National Revolutionary Army’ என்ற இயக்கம் தொடர்பான காணொளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது மியான்மாரில் உள்ள ஒரு ஊடக அமைப்பான Red News Agency என்ற யூடியூப் பக்கத்தில், ஏப்ரல் 14, 2025 அன்று ”Weapons and money seized from the Falam town” என்ற தலைப்பில் பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் விசாரணையில், Nway Oo Lin என்ற யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 15, 2025 அன்று, The camp was seized, weapons and more than three hundred thousand baht in cash were recovered என்ற தலைப்பில் பரவி வரும் காணொளி வெளியிடப்பட்டிருந்தது. இது மியான்மாரின் அதிகாரப்பூர்வ மொழியான பர்மிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதனுடன், மியான்மார் மற்றும் சைனாலாண்ட் என்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்று இருந்தன.
முடிவு :
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், இது ‘Burma National Revolutionary Army’ என்ற இயக்கம் தொடர்பான காணொளியாகும். இதனை மணிப்பூர் ஆயுதப்படைகளுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பப்படுகிறது.