யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அவர் எவ்வாறு உயிர் தப்பினார் என்று கூறி பரவும் இந்த வீடியோ குறித்தான தகவல்கள் உண்மை அல்ல.
பரவிய செய்தி
துரதிர்ஷ்டவசமாக, இன்ஸ்டாகிராமில் நான் கண்ட ஏர் இந்தியா விமான விபத்தின் இந்த காட்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

விரிவான விளக்கம்
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 12 ஆம் தேதி மதியம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 274 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அவர் எவ்வாறு உயிர் தப்பினார் என்று கூறி அனிமேஷன் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் காட்சிகளில், விஸ்வாஸ் குமார் ரமேஷ் விமானத்தின் கதவு ஒன்றின் வழியே உயரமான இடத்திலிருந்து குதித்து உயிர் தப்பியதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து ஆய்வு செய்ததில், “மருத்துவமனை படுக்கையிலிருந்து பேசிய ரமேஷ், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் உள்ளே இருந்த விளக்குகள் மின்னல் மின்னத் தொடங்கின. ஐந்து முதல் 10 வினாடிகளுக்குள், விமானம் காற்றில் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தேன். விளக்குகள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் மின்ன ஆரம்பித்தன. திடீரென்று ஒரு கட்டிடத்தின் மீது மோதி வெடித்தன. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் கட்டிடத்தின் மீது மோதியது” என்றும் கூறியுள்ளார்.
அவர் அமர்ந்திருந்த பகுதி தரைக்கு அருகில் தரையிறங்கியதாகவும், அது கட்டிடத்துடன் மோதவில்லை என்றும் கூறினார். கதவு உடைந்து, சிறிது இடம் இருப்பதைக் கண்டதும், நான் அங்கிருந்து வெளியேற முயற்சித்தேன், என் காலைப் பயன்படுத்தி அந்த திறப்பின் வழியாகத் தள்ளிவிட்டு, ஊர்ந்து வெளியே வந்தேன் என்றும் கூறியுள்ளார்“ என்று “BBC” ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஸ்வாஸ் குமார் ரமேஷ் பேசியுள்ள வீடியோ “DD India“ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது . அதிலும், “நான் என்னை நானே கட்டை அவிழ்த்து, என் காலைப் பயன்படுத்தி அந்தத் திறப்பைத் தள்ளி, ஊர்ந்து வெளியே வந்தேன்“ என்று அவர் கூறியிருப்பதைக் காண முடிகிறது.
இந்நிலையில், அவர் விமானத்தின் கதவு ஒன்றின் வழியே உயரமான இடத்திலிருந்து குதித்து உயிர் தப்பியதாகக் கூறி தவறான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு:
நம் தேடலில், அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷ், விமானத்தின் சிறிய உடைந்த பகுதி ஒன்றின் வழியே ஊர்ந்து வெளியே வந்துள்ளார் என்பது தெளிவாகிறது.